ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக மாணவர்கள் நடத்தும் போராட்டத்திற்கு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. எனவே நாளை தமிழகமெங்கும் போக்குவரத்து பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு தமிழகத்தில் நடைபெற அனுமதி வேண்டும். மேலும், பீட்டா நிறுவனத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் ஏற்கனவே வணிகர் சங்க அமைப்பு நாளை கடை அடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளது. அதேபோல், நாளை வாடகை கார், ஆட்டோ, ஷேர் ஆட்டோ ஆகியவை ஓடாது தமிழக சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், நாளை வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, பாட்டாளி தொழிற்சங்கங்களை சேர்ந்த சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் எனத் தெரிகிறது.
எனவே, தமிழகத்தில் நாளை பேருந்து போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்படும் எனத் தெரிகிறது.