மதுரை மக்களவை தொகுதியில் வாக்குப்பெட்டி இயந்திரங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த மையத்தில் பெண் தாசில்தார் ஒருவர் அத்துமிறீ நுழைந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இதுகுறித்து உயர்மட்ட குழு விசாரணைக்கு உத்தரவிடக்கோரி மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.
இந்த வழக்கு சென்னை ஐகோர்ட் நிதீபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது மாவட்ட தேர்தல் அதிகாரியான ஆட்சித்தலைவரின் உதவியாளர் அறிவுறுத்தலின் பேரில்தான் பெண் தாசில்தார் வாக்கு மையத்தில் நுழைந்ததாக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும் வாக்கு மையத்தில் சில பாதுகாப்பு குறைபாடுகள் கண்டறியப்பட்டதாகவும் தேர்தல் ஆணையத்தின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதனையடுத்து மதுரை கலெக்டர் நடராஜனை இடமாற்றம் செய்யுமாறும் ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த நிலையில் மதுரை மாவட்ட புதிய கலெக்டராக எஸ்.நாகராஜன் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.