Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கிருஷ்ணகிரி விவகாரம்.! தந்தை, மகன் இருவரின் மரணங்கள் காவல் துறை நடத்தும் நாடகமோ.? இபிஎஸ் சந்தேகம்.!!

edapadi

Senthil Velan

, வெள்ளி, 23 ஆகஸ்ட் 2024 (15:59 IST)
பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தந்தை, மகன் இருவரின் மரணங்கள் காவல் துறை நடத்தும் நாடகமோ என்ற சந்தேகமும் எழுகிறது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே, தனியார் பள்ளியில் போலி என்சிசி முகாம் நடத்தி, பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிவராமன், காவல் துறை சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு முன்பாகவே எலி மருந்து சாப்பிட்டு, காவல் துறையால் சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று (ஆக.23) காலை மரணமடைந்ததாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.
 
மேலும், அவரது தந்தை அசோக்குமார் என்பவரும் வியாழக்கிழமை இரவு மதுபோதையில் இருந்தபோது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துவிட்டார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த இரண்டு தொடர் மரணங்களுமே, சந்தேகத்துக்கு இடமானவையாக இருக்கின்றன. சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையில், சிவராமன் இந்த பாலியல் குற்றத்தில் தொடர்புடைய முக்கியப் புள்ளிகளின் பெயர்களை வெளியில் கூறிவிடுவாரோ என்ற அச்சத்தில், அவர் கொல்லப்பட்டிருக்கலாமோ என்று பொது மக்களால் கேள்வி எழுப்பப்படுகிறது.
 
போலி என்சிசி பயிற்சி முகாம்கள் எத்தனை ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது? இதுவரை எத்தனை முறை நடைபெற்றுள்ளது? கிருஷ்ணகிரி தவிர வேறு மாட்டங்களில் இதுபோல் போலி என்சிசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளனவா? சிவராமன் தவிர வேறு யாரேனும் இதில் சம்பந்தப்பட்டுள்ளனரா? போலி என்சிசி முகாம்கள் நடத்தி அவர்களுக்கு என்சிசி சார்பாக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளனவா? போலி என்சிசி பயிற்சியாளர்களை மாணவிகளுக்கு பயிற்சியளிக்க அனுமதித்த பள்ளி நிர்வாகத்தினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன் போன்ற பல சந்தேகங்களுக்கு விடை அளிக்கக்கூடிய சிவராமன், தற்கொலை செய்து கொண்டது பொது மக்களிடையே பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. 
 
இந்த வழக்கில் தொடர்புடைய உண்மைக் குற்றவாளிகளைக் காப்பாற்ற முயற்சிக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் மக்களிடையே எழுகிறது. ஏற்கெனவே, தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் படுகொலை வழக்கில் சரணடைந்த விசாரணைக் குற்றவாளி ஒருவர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட போது எழுந்த கேள்விகளுக்கும் திமுக அரசிடமிருந்து முழுமையான பதில் வரவில்லை. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே போலி என்சிசி முகாம் நடத்தி பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தந்தை, மகன் இருவரின் மரணங்கள் காவல் துறை நடத்தும் நாடகமோ என்ற சந்தேகமும் எழுகிறது.

 
பள்ளி மாணவிகள் பாலியல் வன்முறை தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு, இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி, இந்த கேள்விகளுக்கான உண்மையான விடைகளை வெளிக்கொண்டுவர வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினை எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உக்ரைன் சென்றடைந்தார் பிரதமர் மோடி.! போர் பாதிப்பு குறித்து அதிபர் ஜெலன்ஸ்கி விளக்கம்.!!