மேம்பாலம் கட்டுவதாக கொடுத்த வாக்குறுதியை மறந்த மக்களவை துணை சபாநாயகர்
மேம்பாலம் கட்டுவதாக கொடுத்த வாக்குறுதி
கரூர் அருகே உள்ள மண்மங்கலத்தில் மணல் லாரிகளால் தொடர்ந்து சாலை விபத்துகள் ஏற்பட்டு உயிர் பலிகள் ஏற்பட்டுவருகிறது.
இதனை தடுத்திட சாலையில் மேம்பாலம் அமைத்து கொடுப்பதாக மக்களவை துணை சபாநாயகர் மு.தம்பிதுரை அப்பகுதி மக்களுக்கு தேர்தல் வாக்குறுதியாக கொடுத்தார்.
ஆனால் இந்த வாக்குறுதிகளை மறந்து இந்த பகுதிக்கே வருவதேயில்லை என்று அப்பகுதி மக்கள் பெரும் குற்றசாட்டை வைத்துள்ளனர்.
கண்ணியாகுமாரி முதல் கஷ்மீர் வரை தேசிய நான்கு வழிச்சாலை செல்கிறது. இதில் கரூர் மாவட்டம், மண்மங்கலம் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. மண்மங்கலத்தில் வட்டாட்சியர் அலுவலகம், அரசு மருத்துவமனை, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என அனைத்து பணிகளுக்கும் பொதுமக்கள் இந்த பகுதிக்குதான் வரவேண்டியுள்ளது. இப்பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பேருந்து ஏறுவதற்கும் இங்குதான் வர வேண்டியுள்ளது.
இதே பகுதிகளில் மணல் ஸ்டாக் பாய்ண்ட் மற்றும் காவிரி ஆற்றில் மணல் குவாரிகள் இயங்கி வருகிறது. இப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான மணல் லாரிகள் இரவு, பகலாக அசுர வேகத்தில் வந்து செல்கிறது. இந்த நான்கு வழிச்சாலையை இரண்டு சக்கர வாகனம், கார்களில் கடந்து செல்லும் பொதுமக்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி உயிழந்து வருகின்றனர்.
இப்பகுதிகளில் உள்ள நான்கு வழிச்சாலையில் நடக்கும் ஒவ்வொரு விபத்தின் போதும் மேம்பாலம் அமைத்து கொடுத்திட வலியுறுத்தி சாலை மறியலில் உள்ளிட்ட பலகட்ட போராட்டங்களில் இப்பகுதி மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது அங்கு வரும் அரசு அதிகாரிகள், காவல் துறையினர் அப்போது பிரச்சினையை சமாளிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து செல்கின்றனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதுவே தொடர்கதையாக மாறிவருகிறது.
இந்நிலையில் மண்மங்கலம் நான்கு வழிச்சாலையில் வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டையை சேர்ந்த சொக்கலிங்கம் என்பவர் ஜோலார்பேட்டையிலிருந்து நாகர் கோவிலுக்கு காரில் சென்றார். கார் மண்மங்கலம் வந்தபோது முன்னால் சென்ற மணல் லாரி திடீரென சாலையை கடந்த போது பின்னால் வந்த சொக்கலிங்கத்தின் கார் லாரியின் பின்னால் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த சொக்கலிங்கம் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை பார்த்த இப்பகுதி மக்கள் மணல் லாரிகளை சிறைப்பிடித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வாங்கல் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து சம்ந்தப்பட்ட லாரியை காவல்நிலையத்திற்கு எடுத்து சென்றனர். லாரியின் டிரைவரிடம் விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதியினர் தெரிவிக்கையில் தொடர்ந்து இந்த பகுதியில் விபத்துக்கள் நடந்து வருகிறது. இதனால் பலர் உயரிழந்துள்ளனர். இரண்டு முறை அதிமுக தமிழகத்தில் ஆட்சி செய்து வருகிறது. கரூர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினராகவும், மக்களவை துணை சபாநாயகராக உள்ள மு.தம்பிதுரை நாளுமன்ற, சட்டமன்ற தேர்தலின் போது வாக்கு சேகரிக்க வந்த போது மண்மங்கலம் நான்கு வழிச்சாலையில் மேம்பாலம் அமைத்து கொடுப்பதாக வாக்குறுதியை கொடுத்தார்.
ஆனால் இன்றுவரை அதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதே போன்று அவர் தொகுதி பக்கம் தேர்தலின் போது வாக்கு கேட்க மட்டும்தான் வருவார், மற்றப்படி எதற்கும் வரமாட்டார். அதே போன்று அவர் கொடுக்கும் வாக்குறுதிகள் எதுவும் செய்து கொடுப்பதில்லை மக்களை தமிழக அரசும், இப்பகுதி மக்கள் மக்கள் பிரதிநிதிகளான சட்டமன்ற உறுப்பினர்களும் நிறைவேற்றுவதில்லை மாறாக வாக்குறுதிகளை மறந்து தொடர்ந்து இப்பகுதி மக்களை ஏமாற்றிவருகின்றனர்.
உடனடியாக எங்களுக்கு மேம்பாலம் அமைத்து கொடுக்க வேண்டும், இப்பகுதியில் இயங்கிவரும் மணல் குவாரிகளை மூடவேண்டும் என தெரிவித்தனர்.