Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈழ காவியம் எழுதுவதை பெரும்பணியாகக் கருதுகிறேன்! - வைரமுத்து உருக்கம்

ஈழ காவியம் எழுதுவதை பெரும்பணியாகக் கருதுகிறேன்! - வைரமுத்து உருக்கம்

Webdunia
திங்கள், 25 ஜனவரி 2016 (12:33 IST)
ஈழ மகாகாவியம் ஒன்றை எழுதி முடிப்பதைத் தான் என் வாழ்நாளின் பெரும்பணியாகக் கருதிக்கொண்டிருக்கிறேன் என்று கவிஞர் வைரமுத்து முல்லைத்தீவில் தீவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.
 

 
முல்லைத்தீவில் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஷ்வரன் தலைமையில் உழவர் பெருவிழா கொண்டாடப்பட்டது. அதில் சிறப்பு விருந்தினராகக் கவிஞர் வைரமுத்து கலந்துகொண்டார்.
 
அப்போது பேசிய வைரமுத்து, ”இந்தத் தியாகத் திருமண்ணில் நான் உணர்ச்சிமயமாக இருக்கிறேன். என் பேச்சு நிறைவடைவதற்குள் இருதயமே உடைந்துவிடாதே, என் கண்ணே கலங்கிவிடாதே என்று எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன். ஆசியாவிலேயே அதிகம் கல்வி கற்ற இனம் இலங்கைத் தமிழினம்.
 
தமிழினத்தின் முகவரியை உலகம் எங்கும் எழுதியவர்கள் இலங்கைத் தமிழர்கள். ஆனால் இன்று எல்லாவற்றையும் இழந்து நிற்கிறீர்கள் உங்கள் நம்பிக்கையைத் தவிர. அந்த நம்பிக்கையை ஊட்டத்தான் நான் இங்கு வந்திருக்கிறேன்.
 
விழா தொடங்கும் போது வானம் மெல்லிய தூறல் போடத் தொடங்கியது. பெருமழையே வந்துவிடுமோ என்று பலரும் அஞ்சினார்கள். எந்த மழை வந்தாலும் தமிழர்கள் கலையமாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். வெடி மழையிலேயே கரைந்து போகாத தமிழர்கள் இந்த இடிமழையிலா கரைந்துபோவார்கள் என்று நினைத்துக் கொண்டேன்.
 
தமிழர்களின் ஆதிப் பெருந்தொழில் முதலில் வேட்டை, பிறகு வேளாண்மை. மரபுவழி அறிவோடு வேளாண்மையை அறிவியல் பூர்வமாகக் கையாண்டவர்கள் தமிழர்கள். ஜப்பானிய நடவுமுறை தான் பயிர்களுக்கு இடைவெளியைச் சொல்லிக்கொடுத்தது என்று சொல்லுகிறார்கள்.
 
ஆனால் அதற்கும் முன்பே வேளாண்மையில் நடவுமுறையை விஞ்ஞானப்படுத்தியவர்கள் தமிழர்கள். நெல் நாற்று நட்டால் இரண்டு நெற்பயிர்களுக்கு இடையில் நண்டு ஊர்ந்து செல்லவேண்டும், கரும்பு நட்டால் இரண்டு கரும்புகளுக்கு மத்தியில் நரி ஓடும் இடைவெளி இருக்கவேண்டும். வண்டி ஓடுகின்ற இடைவெளியில் வாழைக் கன்றுகள் நடப்படவேண்டும். தென்னை மரம் நட்டால் இரண்டு தென்னைகளுக்கு இடையில் தேர் ஓடவேண்டும்.
 
“நண்டு ஊர நெல்லு, நரி ஓடக் கரும்பு, வண்டி ஓட வாழை, தேர் ஓடத் தென்னை” என்ற வேளாண்மை விஞ்ஞானம் படைத்தவர்கள் தமிழர்கள். அதனால் தான் திருவள்ளுவர் உழவுக்கு என்று அதிகாரமே இயற்றினார்.
 
இரசாயன உரங்களைத் தவிர்த்து இயற்கை உரங்களைப் பயன்படுத்த வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். இரசாயன உரங்களால் விளையும் விளைச்சலால் மனிதகுலம் புற்றுநோய்த் தாக்குதலுக்கு ஆளாகும் அபாயம் இருக்கிறது.
 
இராசயன உரங்கள் வளர்ந்து வந்த கதையே வேறு. முதல் உலகப்போரில் எட்டு இலட்சம் கைதிகளைக் கொன்று குவித்த அமோனியாப் புகை தான் போர் முடிந்ததும் பூச்சி கொல்லிமருந்தாய் உருமாறியது. இரண்டாம் உலகப்போரில் மனித குலத்தை அழிக்கப் பயன்பட்ட அமோனியா சூப்பர் பாஸ்பேர்ட் என்ற வெடி உப்புக்களைத் தான் போர் முடிந்ததும் வர்த்தகச் சூதாடிகள் இரசாயன உரங்களாக மாற்றி விற்பனைச் சந்தையை ஏற்படுத்தினார்கள்.
 
யாழ்ப்பாணம் வந்து இறங்கியதும் இந்த மண்ணை என் உள்ளங்கையிலெடுத்து என் நெற்றியில் வைத்து வணங்கினேன். முல்லைத்தீவிலும் முள்ளிவாய்க்காலிலும் கனத்த மனத்தோடு என் கண்ணீரைச் சிந்தினேன்.
 
யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, ஆனையிறவு, அம்பாறை, முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால், வல்வெட்டித்துறை, புங்குடுதீவு என்பவை எல்லாம் வெறும் ஊர்ப்பெயர்கள் அல்ல. இந்த நூற்றாண்டின் வரலாற்றுக் குறிப்புக்கள்.
 
ஈழமகாகாவியம் ஒன்றை எழுதி முடிப்பதைத் தான் என்வாழ்நாளின் பெரும்பணியாகக் கருதிக்கொண்டிருக்கிறேன். கடும் உழைப்பில் அதை நான் நிறைவு செய்வேன். இனி இந்த மண்ணில் இரத்தம் சிந்த வேண்டாம், எங்கள் தமிழ் மக்கள் புதிய திசையில் புதிய வாழ்வு பெறவேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

Show comments