Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எதற்கும் அடிபணியாத துணிச்சல்காரர் ஃபிடல் காஸ்ட்ரோ: வைகோ புகழாரம்

Webdunia
சனி, 26 நவம்பர் 2016 (17:53 IST)
உலகத்தையே அச்சுறுத்திக்கொண்டு இருந்த அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அருகில் 80 கல் தொலைவில் இருந்துகொண்டே, எதற்கும் அடிபணியாத துணிச்சல்காரராக கியூப அரசை நடத்தினார். எத்தனையோ கொலை முயற்சிகளில் உயிர் தப்பினார் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.


 

கியூபாவின் முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவு மறைவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “2016ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் நாளாகிய இந்த நாள், மனித குலத்தின் இருதயத்தில் துன்ப ஈட்டியைச் சொருகி உள்ளது.

ஆம்; உலக வரலாற்றில், யுகயுகாந்திரத்திற்கும் புகழ் படைத்த தலைவர்கள் வரிசையில், கியூபாவின் விடுதலை வேந்தன் ஃபிடல் காஸ்ட்ரோ (90) இன்று நம்மை விட்டுப் பிரிந்தார்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முழு ஆயுத பலத்தோடு கியூபாவில் அடக்குமுறை ஆட்சியை நடத்திக் கொண்டு இருந்த சர்வாதிகாரி பாடிஸ்டுடாவை எதிர்த்து இளம்வயதில் ஆயுதம் ஏந்திய போராட்டத்தைத் தொடங்கினார் காஸ்ட்ரோ.

மான்கடா படைத்தளத்தைத் தகர்க்க முனைந்து, அந்த முயற்சி தோற்றபின், சகாக்கள் பலரைப் பலிகொடுத்த நிலையில், சியாரா மஸ்ட்ரா குன்றுகளில், ஆயுதப் பயிற்சிகளைத் தந்து, அர்ஜெண்டைனாவில் பிறந்த மாவீரன் சே குவேராவின் தோள் வலியை துணைவலியாகப் பெற்று, ஆறு ஆண்டுக்காலப் போராட்டத்தில், சர்வாதிகாரி பாடிஸ்டுடாவின் படைகளை நொறுக்கி, 1959 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் நாள் தலைநகர் ஹவானா வீதிகளில் வெற்றிப் புரட்சிக்கொடி ஏந்தி வீர வலம் வந்தார். கியூபக் குடியரசை நிறுவினார்.

மார்க்சின் தத்துவத்திலும் லெனினின் கொள்கையிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட போதிலும் கம்யூனிச உலகத்தில் தனித்த ஒளிச்சுடராகப் பிரகாசித்தார். உலகத்தையே அச்சுறுத்திக்கொண்டு இருந்த அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அருகில் 80 கல் தொலைவில் இருந்துகொண்டே, எதற்கும் அடிபணியாத துணிச்சல்காரராக கியூப அரசை நடத்தினார். எத்தனையோ கொலை முயற்சிகளில் உயிர் தப்பினார்.

புரட்சிகரமான சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். அமெரிக்க முதலாளித்துவ நிறுவனங்களை ஒழித்துக் கட்டினார். அணிசேரா நாடுகளின் அமைப்பின் முக்கியத் தலைவர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார்.

66 ஆண்டுகள் ஆன பின்னரும், ஃபிடல் காஸ்ட்ரோ நிறுவிய அரசை அசைக்க முடியவில்லை. அவர் புரட்சிக்காரராக அரசைக் கவிழ்க்க சதி செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டபோது, ‘வரலாறு என்னை விடுதலை செய்யும்’ என அவர் முழங்கிய உரை, உலகெங்கும் தேசிய விடுதலைக்குப் போராடுகின்றவர்களுக்குப் புத்துணர்ச்சி தரும் வீரியமிக்க உரை ஆகும்.

எரிமலை போன்ற புரட்சிக்காரராக இருந்தபோதும், அவர் நெஞ்சம் கவர்ந்த உரை இயேசு கிறிஸ்துவின் மலைப் பிரசங்கம்தான் என்று பிரகடனம் செய்தார். அவரது இதயம் கவர்ந்த புத்தகம் விக்டர் ஹ்யூகோ எழுதிய ஏழை படும் பாடு (Les Miserable) ஆகும்.

வரலாறு அடிமைத்தளைகளில் இருந்து காஸ்ட்ரோவையும் கியூபாவையும் விடுவித்தது. ஆனால், வரலாற்றின் புகழில் இருந்து ஃபிடல் காஸ்ட்ரோவை ஒருபோதும் விடுவிக்க முடியாது. தமிழகத்தின் பட்டிதொட்டிகளில் எத்தனையோ மேடைகளில் காஸ்ட்ரோ - சேகுவேரா வீரத்தைப் பேசி இருக்கின்றேன்.

உலகம் போற்றுகின்ற புரட்சி நாயகனுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” என்று கூறியுள்ளார்.

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments