சுதந்திர தினத்தன்று மாவட்ட தலைநகரங்களில் தேசியகொடியுடன் இருசக்கர வாகன பேரணி செல்ல, பாஜகவுக்கு அனுமதி அளிக்க வேண்டுமென்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தேசிய கொடியுடன் இரு சக்கர வாகனத்தில் பேரணி நடத்த அனுமதி கோரி கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி அளித்த மனுவை காவல் துறை நிராகரித்தது. இதை எதிர்த்து பாஜக கோவை மாவட்ட செயலாளர் கிருஷ்ண பிரசாத் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், ஏன் அனுமதி மறுக்கப்பட்டது என அரசின் விளக்கத்தை தெரிவிக்க உத்தரவிட்டார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், 'அரசியல் காரணங்களுக்காக மட்டுமே பேரணி நடத்தப்படுகிறது என்றும் பொதுநல நோக்கம் இல்லை என்றும் தெரிவித்தார்.
மேலும் குடியரசுத் தலைவர், பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்கள், நீதிபதிகள் தவிர மற்றவர்களின் வாகனங்களில் தேசிய கொடியை பயன்படுத்தக்கூடாது என்று அவர் கூறினார். பெரும்பாலான காவலர்கள் சுதந்திர தின நிகழ்ச்சியில் இருப்பதால் பாதுகாப்பு வழங்க முடியாது என்றும் சட்டம் -ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டது என்றும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இளைஞர்களிடையே சுதந்திர தினம் குறித்த விழிப்புணர்வுக்காக பேரணி நடத்தப்படுகிறது என்றும் அரசுக்கு எதிராக எந்த கோஷமும் எழுப்பப்படாது என்றும் பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி தேசியக் கொடியை ஏந்தி செல்வதால் அரசுக்கு என்ன பிரச்சனை உள்ளது? என கேள்வி எழுப்பினார்.
மேலும், சுதந்திர போராட்ட வீரர் திருப்பூர் குமரன் தேசியகொடியை கையில் ஏந்தி போராடினார் என்றும் சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் கடந்த நிலையிலும் கொடியை எடுத்து செல்வதற்கு அனுமதி மறுக்கப்படுவது நீதிமன்றத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது என்றும் நீதிபதி தெரிவித்தார். எனவே, பேரணியில் பங்கேற்கும் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் சாலையை காவல்துறையிடம் பாஜக நிர்வாகம் தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதி குறிப்பிட்டார்.
தேசியக்கொடியை ஏந்தி செல்வதை தடுக்கக்கூடாது என காவல்துறை இயக்குநர் அறிவிக்க வேண்டும் என்றும் பாஜக இருசக்கர வாகன பேரணிக்கு அனுமதி வழங்க வேண்டுமென்றும் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.