Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2024 ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை.! குமரியை சேர்ந்த சந்தியாதேவிக்கு விருது..!

Stalin

Senthil Velan

, திங்கள், 29 ஜூலை 2024 (13:11 IST)
2023-24 ஆம் ஆண்டுக்கான சிறந்த திருநங்கை விருது கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சந்தியாதேவிக்கு வழங்கப்பட்டது.   
 
சிறந்த திருநங்கைகான விருது கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருநங்கைகள் சமூகத்திற்கு முன்மாதிரியாக திகழ்வதோடு, திருநங்கைகளின் முன்னேற்றத்திற்காக கடந்த 25 ஆண்டுகளாக வில்லிசைக் கலையின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி சேவை புரிந்து வரும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை சந்தியா தேவியின் சிறந்த சேவையை பாராட்டி,  1 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழை தமிழக முதல்வர் ஸ்டாலின் வழங்கி பாராட்டினார்.
 
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரியைச் சேர்ந்தவர் சந்தியாதேவி. திருநங்கையான இவர் தற்போது தோவாளையில் வசித்து வருகிறார். இவர் முதல் திருநங்கை வில்லிசை கலைஞர் என்ற பெருமை பெற்றவர். வில்லிசையின் பிறப்பிடமான கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள கோயில்கள், மற்றும் கலாச்சார விழாக்களில் சந்தியா தேவி வில்லிசை கச்சேரிகளை நடத்தியுள்ளார். 
 
சுமார் 25 ஆண்டுகளாக வில்லிசை கலையை சந்தியா தேவி பரப்பி வருகிறார். மேலும், பொதுச்சேவை மற்றும் மக்கள் மத்தியில் சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் சந்தியா தேவி ஆர்வம் காட்டி வந்தார். மேலும் தோவாளை ஊராட்சி 4-வது வார்டில்  போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர்,  வார்டு உறுப்பினராகி மக்கள் சேவை ஆற்றி வருகிறார். கொரோனா அச்சுறுத்தல் காலகட்டத்தில், சமூக இடைவெளி விட்டு தோவாளை 4வது வார்டு பகுதி மக்கள் மத்தியில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 
 
சரியான புரிதல் இன்றி இருந்த கிராம பெண்களிடம் தனித்திருப்பதின் அவசியத்தையும், முகக்கவசம் அணிவதையும், கைகளை சுத்தம் செய்வது குறித்தும் எடுத்து கூறி, விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் அங்குள்ள கோயில்களில் சமூக இடைவெளியுடன் தனது வில்லிசை குழுவுடன் அமர்ந்து கொரோனா விழிப்புணர்வு பாடலை பாடி வந்தார். வில்லிசை கேட்க வருவோரையும் முகக்கவசம் அணிந்த பின்னரே அனுமதித்தார். 

 
அரசு மேற்கொள்ளும் விழிப்புணர்வை, திருநங்கை கவுன்சிலர் ஒருவர் ஏற்படுத்தி வருவதை அறிந்த சுகாதாரத்துறையினர், மற்றும் உள்ளாட்சி அமைப்பினர் சந்தியா தேவிக்கு பாராட்டு தெரிவித்தனர். இந்நிலையில், 2023 - 2024ம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கைகா  விருது சந்தியா தேவிக்கு வழங்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காஞ்சிபுரம் மேயராக மகாலட்சுமி தொடர்வார்.. மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு..!