பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவரது மனைவி பொற்கொடி தமிழக ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது கணவர் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரி அவர் மனு அளிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி மாலை சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் முன்பு கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக பொன்னை பாலு (39), அவரது கூட்டாளிகள் பெரம்பூர் திருமலை (45), திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை மணிவண்ணன் (26), குன்றத்தூர் திருவேங்கடம் (33) உள்ளிட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர். அனைவரும் நீதிமன்ற காவலில் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடந்த ஆண்டு வெட்டி கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி தான் பொன்னை பாலு. தனது அண்ணன் கொலைக்கு பழிவாங்க, கூட்டாளிகளுடன் சேர்ந்து ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீஸ் தரப்பில் தகவல் வெளியானது.
இந்த வழக்கில் 4-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த திருவேங்கடம் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனிடையே இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி, தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை நேரில் சந்திக்க அனுமதி கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தனது கணவர் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று அவர் மனு அளிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.