Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோயம்பேடு சந்தையை திருமழிசைக்கு மாற்றும் திட்டத்தை கைவிட வேண்டும்: அன்புமணி கோரிக்கை

Market
, வியாழன், 17 ஆகஸ்ட் 2023 (17:49 IST)
சென்னை கோயம்பேடு சந்தையை திருமழிசைக்கு மாற்றும் திட்டத்தை கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூரியதாவது:
 
சென்னை கோயம்பேட்டில் செயல்பட்டு வரும் காய்-கனி சந்தையை முழுமையாகவோ, பகுதியாகவோ திருமழிசைக்கு மாற்றி விட்டு, சந்தையை வணிக மையமாக மாற்றுவதற்கு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் தீர்மானித்திருக்கிறது. நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒரு லட்சம் பேருக்கு வாழ்வளிக்கும் கோயம்பேடு சந்தையை மூடுவது ஏழை, நடுத்தர குடும்பங்களின் வாழ்வாதாரத்தை சிதைத்து விடும்.
 
சென்னை கோயம்பேட்டில் 85 ஏக்கர் பரப்பளவில் காய்-கனி சந்தை செயல்பட்டு வருகிறது. ஆசியக் கண்டத்தின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றாக கருதப்படும் இந்த சந்தையில் 27 ஏக்கர் பரப்பளவில் மூவாயிரத்திற்கும் கூடுதலான கடைகள் கட்டப்பட்டிருக்கின்றன. மீதமுள்ள பகுதிகள் ஊர்தி நிறுத்தம், கிடங்குகள் போன்றவற்றுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
 
கோயம்பேடு சந்தையில் பல்வேறு வசதிக்குறைவுகள் இருந்தாலும் சென்னை மாநகர மக்களின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அங்கமாக திகழ்ந்து வருகிறது. சிறப்பு மிக்க கோயம்பேடு சந்தையை பகுதியாகவோ, முழுமையாகவோ திருமழிசைக்கு மாற்றுவதற்கு திட்டம் வகுத்துள்ள சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ), அந்த இடத்தில் மிகப்பெரிய வணிக மையம் அமைக்க தீர்மானித்திருக்கிறது. அதற்கான சாத்தியக் கூறு அறிக்கையை தயாரித்து வழங்குவதற்காக குஷ்மன் & வேக்ஃபீல்ட் என்ற பன்னாட்டு நிலவணிக நிறுவனத்தை அமர்த்தியுள்ளது.
 
கோயம்பேடு சந்தையில் உள்ள 85 ஏக்கர் நிலத்தில், 29.5 ஏக்கர் நிலத்தை பூங்காக்கள், சாலைகள், விளையாட்டுத் திடல்கள் ஆகியவற்றுக்காக ஒதுக்கி விட்டு, மீதமுள்ள நிலத்தில் 50 ஏக்கர் பரப்பளவில் வணிக மையம் அமைக்கப்படவுள்ளது. அதில், பன்னாட்டு நிறுவனங்களுக்கான அலுவலக கட்டிடங்கள், சில்லறை வணிக வளாகங்கள் (மால்கள்), பல்வகை பயன்பாட்டுக்கான விளையாட்டு அரங்குகள் ஆகியவற்றுடன் 5 நட்சத்திர விடுதியும் அமைக்கப்படவுள்ளதாக வரைவுத் திட்டத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
 
கோயம்பேடு காய்-கனி சந்தையை மூடி விட்டு, வணிக மையத்தை அமைப்பதற்கான தேவையும், அவசரமும் என்ன? என்பது தெரியவில்லை. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், கோயம்பேடு பகுதி உலகின் முன்னணி நகரங்களில் உள்ள வணிகப் பகுதிகளுக்கு இணையாக அழகாகவும், ஆடம்பரமாகவும் மாறும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால், அந்த அழகுக்கும், ஆடம்பரத்திற்கு அடியில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரமும், கண்ணீரும் புதைக்கப்பட்டிருக்கும். ஏதோ சில நிறுவனங்கள் கொழிப்பதற்காக ஏழை மக்களின் பிழைப்பை பறிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.
 
கோயம்பேடு சந்தையில் 3000 கடைகள் இருந்தாலும் கூட, அவற்றில் ஐந்தாயிரத்திற்கும் கூடுதலான வணிகர்கள் காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை வணிகம் செய்கின்றனர். சந்தைக்கு வரும் காய்கறி, பழங்கள் ஆகியவற்றை இறக்குதல், கையாளுதல், கடைகள் ஆகியவற்றிலும், உணவு வணிகத்திலும் கிட்டத்தட்ட பத்தாயிரம் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். மறைமுகமாக வேலை பெறும் மக்களையும் கணக்கில் கொண்டால், கிட்டத்தட்ட ஒரு லட்சம் குடும்பங்கள் கோயம்பேடு சந்தையை நம்பியுள்ளன. சந்தை திருமழிசைக்கு மாற்றப்பட்டால், இவர்களில் பெரும்பான்மையானவர்கள் வாழ்வாதாரம் இழப்பார்கள். கோயம்பேடு சந்தையை திருமழிசைக்கு மாற்றுவது எந்த வகையிலும் சிறந்தத் திட்டம் இல்லை.
 
கரோனா காலத்தின் போது கோயம்பேடு சந்தை தற்காலிகமாக திருமழிசைக்கு மாற்றப்பட்டது. அங்கு அடிப்படை வசதிகள் இல்லாததாலும், போதிய அளவில் வணிகம் நடைபெறாததாலும் தினமும் 2 லட்சம் கிலோ காய்கறிகள் வீணாயின. அதனால், வணிகர்களுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டது. திருமழிசையில் இப்போது கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டாலும் கூட, கோயம்பேடு அளவுக்கு வணிகம் நடக்க வாய்ப்பில்லை. சென்னை மாநகரில் உள்ள 70 லட்சம் மக்களுக்கு கோயம்பேட்டில் இருந்து காய்கறிகளை விநியோகிப்பது தான் எளிதானதும், செலவு குறைந்ததும் ஆகும். திருமழிசையில் சந்தை அமைக்கப்பட்டு, அங்கிருந்து சென்னை மாநகருக்கு காய்கறிகள் கொண்டு வரப்பட வேண்டும் என்றால் அதற்கு அதிக செலவு ஆகும்.
 
அதனால், சென்னை மக்களுக்குத் தான் பாதிப்பு ஏற்படும். கோயம்பேடு சந்தையை மூடுவதற்காக சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் கூறியிருக்கும் காரணம் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. கோயம்பேடு சந்தையை பராமரிப்பதற்காக ஆண்டுக்கு ரூ.11.70 கோடி செலவு ஆவதாகவும், அதிலிருந்து ரூ.12 கோடி மட்டுமே வருவாய் கிடைப்பதாகவும் தெரிவித்துள்ள சி.எம்.டி.ஏ அதிகாரிகள், ஆண்டுக்கு ரூ.30 லட்சம் மட்டுமே லாபம் கிடைக்கும் இந்த சந்தையை நிர்வகிக்கத் தேவையில்லை என்று தெரிவித்துள்ளனர். இந்த பார்வை மிகவும் தவறானது. கோயம்பேடு சந்தை மூலம் கிடைக்கும் வருமானத்தைப் பார்க்கக் கூடாது; மாறாக, சென்னை மாநகர மக்களுக்கு குறைந்த விலையில் காய்-கனிகள் கிடைக்கவும், ஒரு லட்சம் குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்கவும் கோயம்பேடு சந்தை காரணமாக இருக்கிறது. அதைத் தான் அரசு பார்க்க வேண்டும்.
 
கோயம்பேடு சந்தை என்பது அரசைப் பொறுத்தவரை வணிகம் அல்ல... சேவை என்பதை சி.எம்.டி.ஏ உணர வேண்டும். எனவே, வணிகர்கள், தொழிலாளர்கள், சென்னை மாநகர மக்கள் ஆகியோரின் நலனைக் கருத்தில் கொண்டு கோயம்பேடு சந்தையை திருமழிசைக்கு மாற்றும் திட்டத்தை சி.எம்.டி.ஏ கைவிட வேண்டும். வணிக மையம் அமைக்கும் திட்டத்தை சென்னையின் வேறு பகுதிகளில் செயல்படுத்த வேண்டும்'' என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
 
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆகஸ்ட் 23ம் தேதி வரை மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்