Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக சட்ட மன்ற கூட்டத் தொடரை உடனே கூட்ட வேண்டும்: மு.க.ஸ்டாலின் கோரிக்கை

Webdunia
வெள்ளி, 3 ஜூலை 2015 (23:06 IST)
தமிழக சட்ட மன்றக் கூட்டத் தொடரை உடனே கூட்டவேண்டும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். 
 

 
இது குறித்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-
 
தமிழக சட்டமன்றத்தில் கடந்த மார்ச் 25ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு ஐந்து நாள் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்றது. அந்தத் தொடரிலேயே ஜனநாயக ரீதியிலான விவாதங்களுக்கு எதிர்கட்சிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மக்கள் பிரச்சினைகளையும் பேச விடவில்லை. அந்த பட்ஜெட் கூட்டத் தொடர் ஏப்ரல் 1ஆம் தேதியுடன் முடிந்தது.
 
பொதுவாக பட்ஜெட் கூட்டத் தொடர் என்றால் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்; அதன் மீது விவாதங்கள் நடக்கும். அதே போல் அனைத்து துறைகளின் கொள்கை விளக்கக் குறிப்புகள் அவையில் தாக்கல் செய்யப்பட்டு மானிய கோரிக்கைகள் மீதும் விவாதம் நடைபெறும். ஆனால் இதுவரை இல்லாத வகையில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழகத்தில்தான் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்து விட்டு மான்யக் கோரிக்கைகளை தாக்கல் செய்யாமலேயே இன்னும் அரசு நிர்வாகம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
 
அப்போது ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு மேல் முறையீடு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது. அதனால் “தலைவி விடுதலை பெற்று வரட்டும்” “தமிழக மக்களின் நலன் பற்றி பார்த்துக் கொள்ளலாம்” என்று அப்போது இருந்த முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மான்யக் கோரிக்கைகளைத் தாக்கல் செய்வதில் அக்கறை செலுத்தவில்லை.
 
ஆனால், இன்றைக்கு நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு நூறு நாட்கள் கடந்தும் இதுவரை துறைகளின் மான்யக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்படவில்லை. அவையில் வைத்து அதன் மீது விவாதம் நடைபெற்று அனுமதி பெறாத காரணத்தால் எந்த திட்டங்களும் நிறைவேற்ற முடியாத சூழ்நிலை நிலவுகிறது.
 
ஏற்கனவே வெறும் அறிவிப்புகளை மட்டும் செய்து கொண்டிருந்த அதிமுக அரசு, இப்போது மான்யக் கோரிக்கைகளையும் தாக்கல் செய்யாமல் ஒட்டு மொத்த தமிழக அரசு நிர்வாகத்தை முடக்கி வைத்திருக்கிறது. 100 நாளாகியும் ஏன் சட்டமன்றக் கூட்டத் தொடரை கூட்டவில்லை என்பதற்கு இதுவரை அரசு தரப்பில் எந்த வித காரணமும் சொல்லப்படவில்லை.
 
சட்டமன்றம், நீதிமன்றம், அரசு நிர்வாகம், பத்திரிக்கைத் துறை என்ற நான்கு தூண்கள் தான் ஜனநாயகத்தைத் தாங்கி நிற்கும் முக்கியத் தூண்கள். ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரை நீதிமன்ற உத்தரவுகளை அரசே மதிப்பதில்லை. ஆட்சிக்கு ஒத்துவராத பத்திரிக்கைத் துறையினர் மீது அவதூறு வழக்குகள் போட்டு அடக்குமுறையை அவிழ்த்துவிட்டுள்ளது. ஊழல் வழக்கில் சிக்கி போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதால் அரசு நிர்வாகம் ஸ்தம்பித்து விட்டது.
 
சட்டமன்றக் கூட்டத் தொடரை கூட்டாததால் இப்போது சட்டமன்ற ஜனநாயகமும் சிதைக்கப்படுகிறது. ஆக இந்த நான்காண்டு கால அதிமுக ஆட்சியில் ஜனநாயகத்தின் நான்கு தூண்களும் பாதிக்கப்பட்டு விட்டன.
 
இனியும் இது போன்ற சீர்குலைவுக்கு வழி விடாமல், உடனே சட்ட மன்றக் கூட்டத் தொடரைக் கூட்டி அரசு துறைகளின் மான்யக் கோரிக்கைகளை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

Show comments