Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மோடியா 'லேடியா' - ஜெயலலிதா கேள்வி!

மோடியா 'லேடியா' - ஜெயலலிதா கேள்வி!
, செவ்வாய், 22 ஏப்ரல் 2014 (11:11 IST)
நாட்டின் சிறந்த நிர்வாகி குஜ்ராத்தின் மோடியா அல்லது தமிழ் நாட்டைச் சேர்ந்த இந்த லேடியா என்று முதல்வர் ஜெயலலிதா தென் ச்சென்னையில் பிரச்சாரம் மேற்கொண்ட ஜெயலலிதா பேசியுள்ளார்.

 
தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் ஜெ.ஜெயவர்தனை ஆதரித்து, முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று வேன் மூலம் பிரசாரம் மேற்கொண்டார். கந்தன்சாவடி பஸ் நிலையம், ஐந்து விளக்கு, எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட், தியாகராயநகர் பஸ் நிலையம் ஆகிய இடங்களில் பொதுமக்கள் மத்தியில் ஜெயலலிதா பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
 
2011–ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பேரவைக்கு தேர்தல் நடைபெற்ற போது, 177 வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையில் நாங்கள் அளித்திருந்தோம். அவற்றில் 150 வாக்குறுதிகள் 3 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இது எவ்வளவு பெரிய சாதனை?. மீதமுள்ள வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். அதற்கு இன்னும் 2 ஆண்டுகால அவகாசம் எங்களுக்கு உள்ளது. அதற்குள்ளாக நிச்சயம் நிறைவேற்றுவோம்.
webdunia
ஆனால், 2009–ம் ஆண்டு மக்களவை தேர்தலையொட்டி, தி.மு.க.வால் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. அப்படி இருக்கும்போது தி.மு.க. மீண்டும் வாக்குறுதிகள் அளிப்பது வாக்காளப் பெருமக்களாகிய உங்களை ஏமாற்றும் செயல்.
 
ஒரு மாநிலம் வளர்ச்சி பெற்று இருக்கிறதா? அந்த வளர்ச்சி ஏழை, எளிய நடுத்தர மக்களை சென்றடைந்து இருக்கிறதா? ஒடுக்கப்பட்ட மக்கள் வளர்ச்சி பெற்று இருக்கிறார்களா? என்பதை தெளிவுபடுத்தும் கண்ணாடியாக விளங்குபவை மனித வளக்குறியீடுகள். இதுவே விளம்பர வளர்ச்சி எது என்பதையும், உண்மையான வளர்ச்சி எது என்பதையும் தெளிவுபடுத்தும்.
 
குஜராத்தில் 16.6 சதவீதம் மக்கள் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளனர். ஆனால், தமிழ்நாட்டில் 11.3 சதவீதம் மக்கள் மட்டும் தான் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளனர். உயிருடன் பிறக்கும் 1,000 குழந்தைகளில் ஒரு வயதடைவதற்குள் 38 குழந்தைகள் குஜராத்தில் இறந்து விடுகின்றன. ஆனால், தமிழ்நாட்டில் குழந்தை இறப்பு விகிதம் 21 மட்டுமே. ஒரு லட்சம் குழந்தை பிறப்பில் தாய் இறப்பு விகிதம் குஜராத்தில் 122. தமிழ்நாட்டில் இது 90 தான். 2011–12–ம் ஆண்டு உணவு தானிய உற்பத்தி குஜராத்தில் 88.74 லட்சம் மெட்ரிக் டன் தான். தமிழ்நாட்டில் இது 101.51 லட்சம் மெட்ரிக் டன் என்ற உயரளவு ஆகும். அதே போன்று, உணவு தானிய உற்பத்தித் திறன் குஜராத்தில் ஹெக்டேருக்கு 21.4 குவிண்டால் தான். தமிழ்நாட்டில் இது 38.5 குவிண்டால் என்ற உயரளவாகும். குஜராத்தில் உள்ள தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 22,220 ஆகும். ஆனால், தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 36,996.

குஜராத்தில் உள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை வெறும் 10 லட்சத்து 50 ஆயிரம் தான். தமிழ்நாட்டில் உள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை 15 லட்சத்து 90 ஆயிரம். அதாவது, 5 லட்சத்து 40 ஆயிரம் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் அதிகம். 2011 முதல் 2013 வரை குஜராத்தில் தொடங்கப்பட்ட சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில்களின் எண்ணிக்கை 1,20,016. ஆனால், தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்பட்ட தொழில்களின் எண்ணிக்கை 1,61,732. அதாவது 41 ஆயிரத்து 716 தொழில்கள் கூடுதலாக தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ளன.
 
2012–13–ம் ஆண்டு குஜராத்தில் பெறப்பட்ட அன்னிய முதலீடு வெறும் 2,676 கோடி ரூபாய். ஆனால், தமிழ்நாட்டில் பெறப்பட்டதோ 15,252 கோடி ரூபாய். ஊரகப் பகுதிகளில் தனிநபர் சராசரியாக செலவு செய்வது குஜராத்தில் 1,430 ரூபாய் ஆகும். தமிழகத்தில் இது 1,571 ரூபாய் ஆகும். நகர்ப்புறப் பகுதிகளில் தனிநபர் சராசரி செலவு குஜராத்தில் 2,472 ரூபாய் தான். தமிழ்நாட்டில் இது 2,534 ரூபாய் ஆகும். 2001 முதல் 2012 வரையிலான காலத்தில் குஜராத்தில் மகளிருக்கு எதிரான குற்றங்கள் 65 சதவீதம் அதிகரித்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை இது 29 சதவீதம் குறைந்துள்ளது. புரிந்துகொண்டீர்களா? குஜராத்தில் மகளிருக்கு எதிரான குற்றங்கள் 65 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் 29 சதவீதம் குறைந்துள்ளது. அதே போன்று சாதி, மத கலவரம் 2005 முதல் 2013 வரை குஜராத்தில் 479 ஆகும். தமிழ்நாட்டில் இது 237 தான்.
 
பொது விநியோக திட்டத்தின் கீழ் அதிக மக்கள் பயன்பெறும் மாநிலம் தமிழ்நாடு. குஜராத்தில் இதற்கு நேர் மாறான நிலைமையே உள்ளது. பொது விநியோக திட்டத்தில் இருந்து உணவுப் பொருட்களை கள்ளச் சந்தையில் விற்பது குஜராத்தில் 63 சதவீதம். தமிழ்நாட்டில் இது வெறும் 4 சதவீதம் தான். தமிழகத்தின் வளர்ச்சி என்பது அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி; ஏழை, எளியோர் பங்கு பெறும் வளர்ச்சி என்பதை புரிந்து கொள்ளுங்கள்
 
இப்போது சொல்லுங்கள்? சிறந்த நிர்வாகி யார்? குஜராத்தைச் சேர்ந்த மோடியா? அல்லது தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்த லேடியா? என்று பேசினார் ஜெயலலிதா. 

Share this Story:

Follow Webdunia tamil