அதன் விவரம் வருமாறு,
சபாநாயகர் தனபால்:- முதலமைச்சர் 7 இளைஞர்களுக்கு வாழ்வு கொடுக்கும் வகையில் அவர்களை விடுதலை செய்வதாக அறிவித்துள்ளார். இதற்காக அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அவர் தமிழ் மக்களை நேசிக்கும் மகத்தான தலைவி. தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் நல்ல முடிவை அறிவித்தார். தண்டனைக்குரிய குற்றம் செய்தவர்களையும் மன்னிக்கக்கூடிய இரக்கம் கொண்டவர்கள் தான் சிறந்தவர்கள் என்று திருவள்ளுவர் கூறுகிறார்.
அத்தகைய சிறப்பான குணத்தை முதலமைச்சர் பெற்று இருக்கிறார். 7 இளைஞர்களுக்கு புனர்வாழ்வு கிடைத்து இருக்கிறது.
கொல்கத்தாவில் அன்னை தெரசா நோயுற்றவர்களை தொட்டு குணமாக்கியதால் புனிதர் ஆனார். அதுபோல் தூக்கு கயிறு வரை சென்ற 3 இளைஞர்களின் துயரம் என்ற மன நோய்க்கு சிகிச்சையாக விடுதலை என்ற சுவாசத்தை அளித்த அம்மாவும் புனிதர் ஆவார். அவர்களுக்கு நன்றி.
மோகன்ராஜ் (தே.மு.தி.க.):- ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்றவர்கள் 23 ஆண்டுகள் சிறையில் இருந்ததை கருதி உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்து இருப்பதை எங்கள் கட்சி தலைவர் வரவேற்றார். உலகம் போற்றும் தீர்ப்பு என்று பாராட்டினார். அவர்களை விடுதலை செய்ய மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டது. அதன் அடிப்படையில் தமிழக அரசு தற்போது விடுதலை செய்ய முடிவு எடுத்து இருக்கிறது.
முதலமைச்சர் ஜெயலலிதா:- உறுப்பினர் தவறான தகவலை தெரிவிக்கிறார். உச்சநீதிமன்றம் விடுதலை செய்ய வேண்டும் என்று கூறவில்லை. விடுதலை செய்ய பரிசீலிக்கலாம் என்று தான் கூறியிருக்கிறது. அதனால் தமிழக அமைச்சரவை கூடித்தான் விடுதலை செய்ய முடிவு எடுத்து இருக்கிறது.