Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு
, புதன், 13 நவம்பர் 2013 (13:13 IST)
FILE
தஞ்சை விளார் சாலையில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச் சுவரை இன்று காலை நெடுஞ்சாலைத்துறை இடித்து நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கையில் நடந்த போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக முள்ளிவாய்க்கால் முற்றம் கட்டப்பட்டது. உலக தமிழ் பேரமைப்பு சார்பில் கடந்த 8 ஆம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறக்கப்பட்டது.

தஞ்சை விளார் சாலையில் 2 ஏக்கர் பரப்பளவில் முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா கடந்த 8 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் அதற்கு முன்பே 6 ஆம் தேதி முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்தை உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் திறந்து வைத்தார்.

ஆனாலும் திட்டமிட்டபடி திறப்பு விழா நிகழ்ச்சி 8 ஆம் தேதி தொடங்கி 10 ஆம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற்றது. இதில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்படைத்துறையினர், தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டனர்.

இந்த முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்தில் இலங்கையில் நடைபெற்ற இறுதி கட்ட போரின் போது தமிழர்கள் கொல்லப்பட்ட காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்து தனது உயிரை மாய்த்த முத்துக்குமார் உள்ளிட்ட 20 பேரின் சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்தை பொதுமக்கள் பார்த்து வருகின்றனர்.

இந்த முற்றத்தின் காம்பவுண்டு சுவர் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டிருந்தது. எனவே காம்பவுண்டு சுவற்றை அப்புறப்படுத்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.

அதன்படி இன்று அதிகாலை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்திற்கு சென்றனர். அங்கு ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த காம்பவுண்டு சுவற்றை பொக்லின் மூலம் அகற்றினார்கள்.

4 பொக்லின் எந்திரம் கொண்டு இந்த சுவர் அகற்றப்பட்டது. சுமார் 50 அடி தூரம் காம்பவுண்டு சுவர் இடிக்கப்பட்டது. அங்கிருந்த பூங்காவின் பாதி பகுதியும், அங்கு வைக்கப்பட்டிருந்த போர்டும் அகற்றப்பட்டது. பூங்காவில் வைக்கப்பட்டிருந்த ஈச்சர மரமும் அகற்றப்பட்டது. நீருற்றும் அப்புறப்படுத்தப்பட்டது.

முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்தின் காம்பவுண்டு சுவரை இடித்ததை கண்டித்து சிலர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தஞ்சை - திருச்சி பைபாஸ் சாலையில் இந்த மறியல் நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தர்மராஜன் தலைமையில் காவல்துறையினர் அங்கு வந்தனர். அவர்கள் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் காம்பவுண்டு சுவர் அகற்றப்பட்டதை தொடர்ந்து அங்கு ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு இருந்தனர். இதனால் பரபரப்பு எற்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil