Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதர மாநிலங்களிலும் இலங்கைக்கு பொருளாதார தடை தீர்மானம்: நாம் தமிழர் கட்சி வேண்டுகோள்

Webdunia
ஞாயிறு, 19 ஜூன் 2011 (11:44 IST)
இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்கும் தீர்மானத்தை இதர மாநிலங்களிலும் நிறைவேற்ற வலியுறுத்த வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நாம் தமிழர் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

ஈழ தமிழர்களை கொன்று குவித்த இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நேற்றிரவு சென்னை சைதாப்பேட்டை தேரடி திடலில் நடந்தது.

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இயக்குனர்கள் மணிவண்ணன், ஆர்.கே.செல்வமணி, நடிகர் சத்யராஜ், பேராசிரியர் தீரன், அற்புதம்மாள், கலைக்கோட்டுதயம், அன்புதென்னரசு, கோட்டைகுமார் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.

இக்கூட்டத்தில் அய்யநாதன் தீர்மானங்களை வாசித்தார்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

இலங்கையில் தமிழினத்தை அழித்த அதிபர் ராஜபக்சே உள்ளிட்டவர்களை போர்க்குற்றவாளிகள் என அறிவிக்குமாறும், மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கைக்கு எதிராக பொருளாதார தடையை ஏற்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது மட்டுமின்றி, அதனடிப்படையில் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து வழங்கிய மனுவிலும் அந்த கோரிக்கையை வலியுறுத்தியுள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

மத்திய அரசின் நடவடிக்கைகள் அனைத்துமே ராஜபக்சே அரசுக்கு ஆதரவாகவே உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளுமாறு முதல்வருக்கு வலியுறுத்துகிறோம். சமீபத்தில் முதல்வரை சந்தித்துவிட்டு கொழும்பு சென்ற தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் ஐ.நா. குழுவின் அறிக்கை குறித்து கருத்து கேட்டதற்கு,"ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் எந்த ஒரு நாட்டையும் தனிமைப்படுத்தி கண்டனம் செய்ய இந்தியா அனுமதிக்காது"என்று கூறியுள்ளார்.

இதற்கு இலங்கை அரசை தனிமைப்படுத்த மாட்டோம் என்பதே பொருள். எனவே மத்திய அரசு இலங்கைக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காது என்பது தெளிவாகியுள்ளது. இலங்கைக்கு எதிராக மற்ற மாநில அரசுகளின் தலைவர்களிடமும், இந்தியாவின் அரசியல் கட்சிகளின் தலைவர்களிடமும் பேசி, இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை தீர்மானத்தை நிறைவேற்றுமாறு செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறோம்.

தூத்துக்குடி - கொழும்பு இடையிலான கப்பல் போக்குவரத்தை நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியதற்காகவும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தமிழினம் நன்றி தெரிவித்துக்கொள்கிறது. பொருளாதார புறக்கணிப்பை முன்னெடுக்கும் வகையில் இலங்கை பொருட்களை புறக்கணிப்போம், தமிழக வணிகர்கள் யாரும் அந்நாட்டுடன் வணிகம் செய்யக்கூடாது, இலங்கை விமான சேவையை புறக்கணிப்போம், தமிழ் திரைத்துறை மட்டுமின்றி, இந்திய திரைப்பட கலைஞர்களும் இலங்கை செல்ல வேண்டாம் என்றும் வலியுறுத்த நாம் தமிழர் கட்சி முடிவெடுத்துள்ளது.

இதற்காக முதலமைச்சரும் பொதுவானதொரு வேண்டுகோள் விடுக்க வேண்டும். கச்சத்தீவை மீட்பதற்கான முயற்சியாக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தையும் வரவேற்கிறோம். அதோடு, இருநாடுகளுக்கிடையேயான கடற்பகுதியில் எவ்வித தடையுமின்றி தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க அனுமதிக்கப்பட வேண்டும். இல்லையேல் இந்திய - இலங்கை கடல் எல்லை வரையறை ஒப்பந்தத்தையே ரத்து செய்வது தான் சரியானதாக இருக்கும் என்ற கோரிக்கையை தமிழக அரசுக்கு முன்வைக்கிறோம்.

தமிழகத்தில் 40-க்கும் மேற்பட்ட ஈழத் தமிழ் அகதிகள் சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுதலை செய்ய வேண்டும். அவர்களை கண்காணிப்பது அவசியம் என கருதினால் அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கி ஈழத் தமிழர்களுக்கான முகாம்களில் தங்கியிருக்குமாறு கட்டளையிடலாம்.

உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் தோல்வியை பொறுக்க முடியாமல் இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை சித்ரவதை செய்து படுகொலை செய்துள்ளனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, இந்திய நீதிமன்றத்தில் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டம் தொடங்கியதும் சிறிது நேரத்தில் மழை பெய்யத் தொடங்கிய போதிலும் கூட்டத்தினர் கலையாமல் இறுதி வரை காத்திருந்து சீமான் பேச்சை கேட்டனர் என்பது குறிபிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் வெளியீடு.. எந்த இணையதளத்தில் பார்க்கலாம்?

மீண்டும் ஒரு ரயில் விபத்து: இன்ஜின் மற்றும் 8 பெட்டிகள் தடம் புரண்டதால் பரபரப்பு..!

சென்னை உள்பட 9 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் மழை.. மீண்டும் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!

இரண்டாவது நாளாக தொடரும் காத்திருப்பு போராட்டம்- துணை ஆணையாளரிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டப்படவில்லை..

Show comments