Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய கல்விக்கட்டணம்: ஏ‌ப்ர‌ல் இறுதி‌யி‌ல் அறிக்கை

Webdunia
செவ்வாய், 19 ஏப்ரல் 2011 (10:24 IST)
6,400 தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்விக்கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பான அறிக்கையை நீதிபதி ரவிராஜபாண்டியன் கமிட்டி இந்த மாத இறுதிக்குள் த‌மிழக அரசிடம் சமர்ப்பிக்க உள்ளது.

தனியார் பள்ளிகளில் மாணவர்களிடம் அதிக கல்வி கட்டணம் வசூலிப்பதை ஒழுங்குபடுத்தும் வகையில் ஓய்வுபெற்ற உய‌ர் ‌நீ‌திம‌ன்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் தமிழக அரசு ஒரு கமிட்டியை அமைத்தது.

இந்த கமிட்டி தமிழகத்தில் உள்ள 10,400 பள்ளிகளின் நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தி, ஒவ்வொரு பள்ளிக்கும் தனித்தனியே கட்டணத்தை நிர்ணயித்து, அரசிடம் பரிந்துரை செய்தது. அந்த பரிந்துரையின் அடிப்படையில் தனியார் பள்ளிகளுக்கு கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.

கல்விக்கட்டணம் போதாது என்று கருதும் பள்ளிகள் அதுகுறித்து கமிட்டியிடம் மேல்முறையீடு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, 6,400 பள்ளிகள் மேல்முறையீடு செய்தன. இதைத்தொடர்ந்து, கட்டிட வசதி, ஆய்வக வசதி, ஆசிரியர் சம்பளம் உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் அந்த பள்ளிகளுக்கு புதிய கல்விக்கட்டணம் நிர்ணயிக்க உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் காலக்கெடு விதித்தது.

இதற்கிடையில், நீதிபதி கோவிந்தராஜன் உடல்நிலை காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து, அவருக்குப் பதிலாக ஓய்வுபெற்ற உய‌ர்‌ நீ‌திம‌ன்ற நீதிபதி ரவிராஜபாண்டியனை கமிட்டியின் புதிய தலைவராக அரசு நியமித்தது. இதை‌‌த் தொட‌ர்‌ந்து மாவட்ட வாரியாக பள்ளி நிர்வாகிகள் அழைக்கப்பட்டு அவர்களின் கோரிக்கைகள் பெறப்பட்டன.

கடந்த 6 மாதங்களாக தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் கருத்து கேட்டறியப்பட்டு வருகிறது. இதற்காக ஒரு கணக்காளர், கல்வி அதிகாரி, பொதுப்பணித்துறை பொ‌றியாள‌ர் ஆகியோர் அடங்கிய ஒருகுழு இயங்கி வருகிறது. அவர்கள் இதுவரை 6 ஆயிரம் பள்ளிகளின் நிர்வாகிகளிடம் கோரிக்கைகளை பெற்றுள்ளனர். இன்னும் 400 பள்ளிகளிடமே கருத்து கேட்க வேண்டியுள்ளது. இந்த பணியை விரைவாக முடித்து 6,400 பள்ளிகளுக்கும் புதிய கல்விக்கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளது.

நர்சரி பள்ளிகள் அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.5 ஆயிரமும், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் அதிகபட்சமாக ரூ.25 ஆயிரமும் கட்டணம் நிர்ணயிக்க வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிகிறது. அவர்கள் கோரியுள்ள கல்வி கட்டணத்தையும், பள்ளிகளின் கட்டிட வசதி, ஆய்வக வசதி, ஆசிரியர் சம்பளம் உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையிலான கட்டணத்தையும் ஆய்வு செய்து புதிய கல்விக்கட்டணம் நிர்ணயிக்கப்படும். இந்த பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை இந்த மாத இறுதிக்குள் அரசிடம் சமர்ப்பிக்க நீதிபதி ரவிராஜபாண்டியன் கமிட்டி முடிவு செய்துள்ளது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments