இலங்கையில் வளிமண்டத்தில் ஏற்பட்ட காற்று சுழற்சி தமிழக நிரப்பரப்பில் நீடிப்பதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னையில் அதிகாலை முதலே மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
புரசைவாக்கம், சேத்துப்பட்டு, அடையாறு, மயிலாப்பூர், சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம், கொளத்தூர் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
திடீர் மழை காரணமாக காலையில் அலுவலகத்திற்கு புறப்பட்ட சென்னைவாசிகள் பலர் சிரமத்திற்கு ஆளாகினர்.
எங்கு பார்த்தாலும் தண்ணீர் தேங்கி கிடப்பதுடன் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டுகள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
அதுமட்டுமின்றி கழிவு நீர் தொட்டிகள் திறந்து கிடப்பதால் சாலைகளில் நடக்கவே மக்கள் பயப்படுகின்றனர்.
இதனிடையே வளிமண்டல சுழற்சி தமிழக நிலப்பரப்பை நோக்கி நகர்ந்துள்ளதால் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மழை பெய்யக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.