Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கூட்டணிக்கு தயார்: தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் முடிவு

கூட்டணிக்கு தயார்: தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் முடிவு
சென்னை , சனி, 9 ஜனவரி 2010 (16:37 IST)
இனிவரும் தேர்தல்களில் கூட்டணி வைத்துப் போட்டியிடுவது என்ற முடிவை இன்று நடைபெற்ற தனது கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் தேமுதிக எடுத்துள்ளது.

இதுநாள் வரை மக்களுடனும், தெய்வத்துடனும்தான் கூட்டணி என்று கூறி வந்தார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். ஆனால் சமீபத்திய இடைத்தேர்தலில் தேமுதிகவுக்கு டெபாசிட் பறிபோகும் அளவிற்கு படுதோல்வி ஏற்பட்டது.

இதனையடுத்து விஜயகாந்தை சந்தித்த கட்சியின் நிர்வாகிகள், அடுத்த தேர்தலில் கூட்டணி வைத்துப் போட்டியிட்டால்தான் கட்சி தாக்குப் பிடிக்க் முடியும் என்று கூறியதாக செய்திகள் வெளியாகி இருந்தது.

இந்நிலையில், சென்னை அருகே வானகரத்தில் உள்ள திவாரூர் வெங்கடாஜலபதி மண்டபத்தில் தேமுதிகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்தில் கட்சியின் அவைத்தலைவர் பன்ருட்டி ராமச்சந்திரன் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இதில் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் கட்சிக்கு கிடைத்த தோல்வி, கட்சியின் தற்போதைய நிலைமை, நடப்பு அரசியல் சூழ்நிலை மற்றும் எதிர்கால அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டது.

விவாதத்தின் முடிவில் "தனித்துப்போட்டி... தெய்வத்துடன் கூட்டணி..." போன்ற கவுரவத்தை விட்டுவிட்டு ஏதாவது ஒரு கட்சியுடன் ( அநேகமாக காங்கிரஸ் அல்லது அதிமுக ) கூட்டணி வைத்து அடுத்த தேர்தலை சந்திப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

இதனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் உறுதிப்படுத்தியது. தீர்மானத்தில் கூறப்பட்டிருந்த முக்கிய அம்சங்கள் வருமாறு:

தமிழகத்தில் ஜனநாயகத்தை காத்திட தேமுதிக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறது.இதில் ஜனநாயகத்தின் மீட்பு போராட்டத்தில் உண்மையாகவும், அக்கறையுடனும் ஈடுபாடு கொண்ட அரசியல் இயக்கங்கள் தேமுதிகவுடன் இணைந்து செயல்பட முன்வருமானால் அவர்களுடன் இணைந்து செயல்பட முன்வந்துள்ளோம்.

இதன்படி இது தொடர்பான முடிவை எடுக்கும் முழு அதிகாரம் மற்றும் உரிமை கட்சி தலைவர் விஜயகாந்த்துக்கு அளிக்கப்படுகிறது.

ஆஸ்ட்ரேலியாவில் தாக்கப்பட்டால் கண்டனம் தெரிவிக்கும் மத்திய அரசு, மலேசியா மற்றும் வளைகுடா நாடுகளில் வாழும் தமிழர்கள் தாக்கப்பட்டால் குரல் கொடுக்க தயங்குகிறது.இதில் பாகுபாடு காட்டக்கூடாது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Share this Story:

Follow Webdunia tamil