Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தினமலர் ஆசிரியர் கைதுக்கு பத்திரிகையாளர்கள் கண்டனம்

தினமலர் ஆசிரியர் கைதுக்கு பத்திரிகையாளர்கள் கண்டனம்
, வியாழன், 8 அக்டோபர் 2009 (20:45 IST)
சென்னை: நடிகை புவனேஸ்வரி விபச்சார வழக்கில் கைதான விவகாரம், தற்போது பத்திரிகைகளுக்கும், நடிகர் சங்கத்திற்கும் இடையே மோதலை ஏற்படுத்தியுள்ளது.

கலைத்துறைக்கும், பத்திரிகைத் துறைக்கும் இடையே மோதலாக வெடித்துள்ளது.

தினமலர் பத்திரிகை செய்தி ஆசிரியர் கைது செய்யப்பட்டிருப்பதற்கு பத்திரிகையாளர்கள் அனைவரும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும், பத்திரிகையாளர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் தரக் குறைவாக விமர்சித்த நடிகர், நடிகைகளைக் கைது செய்து சிறையிலடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

இதனிடையே இந்த கைது நடவடிக்கைக்கு கலைத்துறையினர் முதலமைச்சர் கருணாநிதியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளனர்.

கடந்த 2ஆம் தேதியன்று நடிகை புவனேஸ்வரியை விபச்சார தடுப்பு பிரிவின் கீழ் போலீசார் கைது செய்தனர். அப்போது அவர் சில நடிகைகளை பற்றி அவதூறாக கூறியதாக தினமலர் பத்திரிகை செய்தி வெளியிட்டதுடன், சம்பந்தப்பட்ட நடிகைகளின் பெயர்களையும் வெளியிட்டது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைக் கண்டித்து நடிகர், நடிகைகள் சென்னை மாநகர போலீஸ் கமிஷனரைச் சந்தித்து மனு ஒன்றை கொடுத்தார்கள்.

சம்பந்தப்பட்ட பத்திரிகை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்கள். இதனிடையே தான் வெளியிட்ட செய்திக்கு தினமலர் பத்திரிகை வருத்தம் தெரிவித்தது.

உள்நோக்கத்துடன் வெளியிடவில்லை என்றும், யாரையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக வருந்துவதாகவும் அப்பத்திரிகை தெரிவித்தது.

ஆனால் நடிகர், நடிகைகள் நேற்று சென்னையில் கூடி தீர்மானம் நிறைவேற்றினார்கள். புவனேஸ்வரி கூறியதாக சில விவரங்களை காவல்துறையினர் தெரிவித்ததாக செய்தி வெளியிடப்பட்டது. அது உண்மையாக இருந்தால் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அது உண்மை இல்லை என்றால் சம்பந்தப்பட்ட பத்திரிகை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பத்திரிகையாளர்களை மிகக் கடுமையாக இந்த கூட்டத்தில் சில நடிகர், நடிகைகள் விமர்சித்து பேசினார்கள். இதனிடையே தினமலர் பத்திரிகை செய்தி ஆசிரியர் லெனின், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

பத்திரிகையாளர் சங்கத்தினர் கண்டனம்:

லெனின் கைது சம்பவத்திற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம், சென்னை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், தமிழ்நாடு புகைப்பட பத்திரிகையாளர் சங்கம் ஆகியவை கண்டனம் தெரிவித்தன.

இதனிடையே இந்த கைது நடவடிக்கைக்கு கலைத்துறையினர் முதலமைச்சர் கருணாநிதியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

இதற்கிடையே சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பல்வேறு பத்திரிகையாளர் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற அவசர கூட்டம் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மூத்த பத்திரிகையாளர்கள் உள்பட 200க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டு தினமலர் செய்தி ஆசிரியர் கைது செய்யப்பட்ட நடவடிக்கையை கண்டித்தனர்.

ஒரு பத்திரிகை தவறான செய்தி வெளியிட்டதற்கு வருத்தம் தெரிவித்த நிலையில், அதன் மீது நடவடிக்கை எடுக்க விரும்பினால் மானநஷ்ட வழக்கு, அவதூறு வழக்கு போன்றவற்றை தொடர்ந்து சட்டப்படி நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

அதற்கு மாறாக காவல் துறையினர், பத்திரிகை அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து செய்தி ஆசிரியரை வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளது ஜனநாயக நடைமுறைகளுக்கு ஏற்றதல்ல என்றும், இந்த நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும் கூட்டத்தில் பேசிய பத்திரிகையாளர்கள் கூறினார்கள்.

இத்தகைய அத்துமீறிய நடவடிக்கைளில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், கைது செய்யப்பட்ட செய்தி ஆசிரியரை எந்தவித நிபந்தனையும் இன்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று அவர்கள் அரசை வலியுறுத்தினார்கள்.

பத்திரிகையாளர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் தரக்குறைவாக விமர்சித்த நடிகை ஸ்ரீபிரியா, நடிகர்கள் விவேக், விஜயகுமார் ஆகியோரது பேச்சுக்கள் படங்களாக காண்பிக்கப்பட்டது. அந்த பேச்சைக் கேட்ட பத்திரிகையாளர்கள் ஆவேசமடைந்து இந்த நடிகர், நடிகைகள் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்து சிறையில் தள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil