சென்னை மெரினா கடற்கரையை ரூ.20.75 கோடி செலவில் அழகுப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாக மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை மெரினா கடற்கரை அழகுப்படுத்தும் பணியின் முதற்கட்டமாக ரிசர்வ் வங்கி முதல் போர் நினைவுச் சின்னம் வரை ரூ.10 கோடி செலவில் புதிய பூங்கா அமைக்கப்பட்டு, முதல்வர் கருணாநிதியால் கடந்த மே 29ம் தேதி திறந்து வைக்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக, நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை அழகுப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன் இன்று அதிகாலை மெரினா கடற்கரையில் நடைபயிற்சி செல்வோரிடம், கடற்கரை அழகுப்படுத்தும் பணி மற்றும் செம்மைப்படுத்தும் பணி ஆகியவை குறித்து கருத்துக்களை கேட்டறிந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:சென்னை மாநகரை அழகுபடுத்தும் நடவடிக்கையாக, மெரினா கடற்கரையை அழகுபடுத்தும் பணி நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை 3.10 கி.மீ. நீளத்திற்கு ரூ.20 கோடியே 75 லட்சம் செலவில் நடைபெற்று வருகிறது. நடைபாதையில் கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டும், நடைபாதை ஓரத்தில் கிரானைட் தூண்கள் அமைத்தும், மற்றும் துருப்பிடிக்காத ஸ்டீல் கைப்பிடிகள் அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. பொதுமக்கள் அமர்வதற்காக 14 அமர்வு மேடைகள், வண்ண, வண்ண 2 கிரானைட் கற்களைக் கொண்டு கடற்கரையை பார்த்த வண்ணம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு, அதில் 12 அமர்வு மேடைகள் முடிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 2 அமர்வு மேடைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நடைபாதைக்கும், கடற்கரை பயன்பாட்டு சாலைக்கும் இடையே 15 மீட்டர் அகலத்திற்கு அழகிய புல்தரைகள், 4 மீட்டர் அகலத்திற்கு நடைபயிற்சிக்கான நடைபாதை அமைக்கும் பணியும் முடிவு பெற்றுள்ளது. கடற்கரைக்கு வருகை தரும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 4 இடங்களில் 40 கழிப்பிடங்கள் மற்றும் 50 சிறுநீர் கழிப்பிடங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. மெரினா கடற்கரையை அழகுபடுத்த சிறப்பு வகையான மின்விளக்குகள் ரூ.3.50 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை 90 விழுக்காடு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு, முடிக்கப்படும்.மெரினா கடற்கரையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்கும் பொருட்டு, வரும் 26ம் தேதி மாலை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேப்பர் பைகள் வழங்கும் பணி நடைபெறும். சென்னை மாநகராட்சி மேற்கொண்ட விழிப்புணர்வு காரணமாக தற்பொழுது மெரினா கடற்கரையில் 1500 கடைகளில் குடிநீர் பாக்கெட்டுகள், பாப்கார்ன்கள், ரஸ்னா போன்றவை பிளாஸ்டிக் பொருட்களில் விற்பனை செய்வது நிறுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சியின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.