தி.மு.க.வை ஒரு கட்சி என்ற முறையிலும், கருணாநிதியை தனிப்பட்ட முறையிலும் விமர்சனம் செய்வது என் நோக்கம் அல்ல என்று கூறியுள்ள பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், தி.மு.க.வின் தவறுகளையும், அரசாங்கத்தின் தவறுகளையும் சுட்டிக்காட்டுவதும் மக்கள் பிரச்சனைகளுக்காக போராடுதும்தான் பா.ம.க.வின் செயல்பாடாக இருந்து வருகிறது என்று கூறியுள்ளார்.
வேலூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தி.மு.க.வையும், கருணாநிதியையும் எதிர்க்கும் ஒரே கொள்கையுடன் ராமதாஸ் செயல்பட்டு வருகிறார் என்று கருணாநிதியின் பத்திரிகை பிரச்சாரம் செய்து வருகிறது. தி.மு.க.வை ஒரு கட்சி என்ற முறையிலும், கருணாநிதியை தனிப்பட்ட முறையிலும் விமர்சனம் செய்வது என் நோக்கம் அல்ல. தி.மு.க.வின் தவறுகளையும், மக்கள் விரோத கொள்கைகளையும், ஜனநாயக விரோத கொள்கைகளையும், அரசாங்கத்தின் தவறுகளையும் சுட்டிக்காட்டுவதும் மக்கள் பிரச்சனைகளுக்காக போராடுவதும்தான் பா.ம.க.வின் செயல்பாடாக இருந்து வருகிறது.
இதேப்போல்தான் 2001-06 காலக் கட்டத்தில் அ.தி.மு.க ஆட்சி நடைபெற்றபோதும், நாங்கள் பிரதான எதிர்க்கட்சியாக சட்டமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் செயல்பட்டு வந்திருக்கிறோம். பொறுப்புள்ள எதிர்க்கட்சி என்ற முறையில் எங்கள் ஜனநாயக கடமைகளை ஆற்றி வருகிறோம். எங்களை குறை கூறும் தி.மு.க இதற்கு முன்பு போராட்டமே நடத்தியதில்லையா? எதிர்க்கட்சியாக இருந்த போது தி.மு.க நடத்திய போராட்டங்கள்தான் அதிகம்.
காமராஜர் ஆட்சி நடைபெற்ற போது அவரது அரசை எதிர்த்து தி.மு.க போராடியதில்லையா? காமராஜரை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை என்று கருணாநிதியால் கூற முடியுமா? விலைவாசி உயர்வு போராட்டம் நடத்தி அண்ணா போன்ற தலைவர்களும் சிறை சென்று இருக்கிறார்கள். எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்திலும் தி.மு.க பல்வேறு போராட்டங்களை நடத்தி இருக்கிறது.
தி.மு.க செய்தது போலத்தான் நாங்கள் இப்போது மக்கள் பிரச்சனைகளுக்காக போராட்டம் நடத்தி வருகிறோம். ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்தின் நீர் ஆதாரமாக விளங்கும் பாலாறு, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநில அரசுகளின் அணை கட்டும் திட்டங்களாலும், மணல் கொள்ளையாலும், தோல் பதனிடும் தொழிற்சாலைகளின் கழிவுநீராலும் இன்றைக்கு பாழ்பட்டு பாலைவனமாக காட்சி அளிக்கிறது. இதனை தடுப்பதற்கு தி.மு.க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தி.மு.க.வுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே லட்சிய கூட்டணி இருப்பதாக கருணாநிதி கூறுகிறார். மத்தியிலும் மாநிலத்திலும் இவர்களுடைய ஆட்சிதான் நடக்கிறது. அப்படியானால் ஆந்திராவின் அணை கட்டும் திட்டத்தை ஏன் இவர்களால் தடுத்து நிறுத்த முடியவல்லை. இந்த பிரச்சனைக்காக பா.ம.க.தான் தொடர்ந்து போராடி வருகிறது. அதன் தொடர்ச்சியாக பாலாற்றில் ஆந்திர அரசு அணை கட்டுவதை கண்டித்து வரும் 24ஆம் தேதி வேலூரில் பா.ம.க சார்பில் கண்டன பேரணியும் ஆர்ப்பாட்டமும் நடத்தவிருக்கிறோம்.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் முறைகேடுகள் குறித்து நிரூபிக்குமாறு தேர்தல் ஆணையம் எங்களுக்கு கடிதம் எழுதி உள்ளது. இதற்கு நாங்களும் பதில் அனுப்பியுள்ளோம். நடுநிலையான பொறியாளர்கள், நிபுணர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சட்டவல்லுனர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோரை கொண்ட குழுவை அமைத்து இந்த புகாரை நிரூபிக்க தேர்தல் ஆணையம் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று அந்த பதில் கடிதத்தில் நாங்கள் கேட்டுக்கொண்டிருக்கிறோம். நாங்கள் அனுப்பியுள்ள பதில் கடிதத்தையும் பொதுமக்களுக்கு நாளை வெளியிட உள்ளோம் என்று ராமதாஸ் கூறினார்.