தேர்தலை எப்படி சந்தித்து வெற்றி கொள்வது என்பது குறித்து தி.மு.க.வினர் உள்பட அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பாடம் நடத்தக் கூடிய அளவிற்கு உயர்கல்வி பெற்றவர் மு.க.அழகிரி என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பாராட்டி பேசினார்.
சென்னை கிண்டியில் பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப உயர்கல்வி மைய புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. விழாவில் மத்திய ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி இவ்விழாவில் பங்கேற்று அடிக்கல் நாட்டினார்.
விழாவில் வாழ்த்துரை வழங்கி பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் இந்த உயர்கல்வி மையம் அமைகிறது. இந்த உயர்கல்வி மையத்தை இன்னொரு உயர்கல்வி மையமே அடிக்கல் நாட்டி திறந்து வைப்பது சிறப்புக்குரியதாகும்.
அரசியலில் பலருக்கு உயர்கல்வியை கற்றுத்தருபவர் அழகிரி. குறிப்பாக தேர்தல் வந்தால் அதை எப்படி சந்தித்து வெற்றி கொள்வது என்கிற உயர்கல்வியை தி.மு.க.வினருக்கு மட்டும் அல்ல அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் கற்றுத்தருபவர் மு.க.அழகிரி. இந்த இடைத்தேர்தல் நேரத்தில் கூட அங்குள்ள பணிகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு தொழில் மீது தாம் கொண்டுள்ள அக்கறை காரணமாக இந்த விழாவில் அவர் கலந்துகொண்டு உள்ளார்.
உலகளவில் இன்று பிளாஸ்டிக் பொருட்கள் என்பது மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. புதிய, புதிய கண்டுபிடிப்புகளை குறிப்பாக சுற்றுச்சூழலை பாதிக்காத பிளாஸ்டிக் பொருட்களை உருவாக்குவதற்கு உரிய ஆய்வுகளை இந்த உயர்கல்வி மையம் செய்ய வேண்டும் என்று தங்கம் தென்னரசு பேசினார்.