கரும்பு டன்னுக்கு ரூ.2000 பெற்றுத்தர கருணாநிதி நடவடிக்கை: சரத்குமார் வலியுறுத்தல்
சென்னை , திங்கள், 29 ஜூன் 2009 (12:57 IST)
மத்திய அரசை வலியுறுத்தி கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.2000 பெற்றுத்தர முதலமைச்சர் கருணாநிதி அவசர நடவடிக்கையை எடுத்திட வேண்டும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு கரும்புக்குரிய விலையாக ஒரு டன்னுக்கு ரூ.1077.60 என்று அறிவித்து இருப்பது தமிழக கரும்பு விவசாயிகள் மத்தியில் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தேசிய வேளாண் விலை நிர்ணயக்குழு, ஒரு டன் கரும்புக்கு ரூ.1550 வழங்கலாம் என்று மத்திய அரசிற்கு பரிந்துரை செய்த பிறகும் பிழிதிறனையும் 9 விழுக்காட்டில் இருந்து, 9.5 விழுக்காடாக உயர்த்தியதோடு விலையையும் ரூ.1077 என்று குறைத்து நிர்ணயித்திருப்பது வருத்தத்திற்குரியது.கடந்த 6 மாதத்திற்கு முன்பு நியாயவிலை கடையில் ஒரு கிலோ சர்க்கரையின் விலை ரூ.13 மட்டும்தான். அதேபோல் வெளி மார்க்கெட் கடைகளிலும் ஒரு கிலோ ரூ.13 என்றுதான் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இப்போது வெளி மார்க்கெட் கடைகளில் சர்க்கரை 1 கிலோ ரூ.26க்கு விற்கப்படுகிறது. பிறகு ஏன் கரும்பு விலையை மட்டும் உயர்த்தித்தர முடியாது.மேலும் ஒரு டன் கரும்பு அரைக்கப்பட்டால் 90 கிலோ சர்க்கரை கிடைக்கும். அது மட்டுமல்ல 1 டன் அரைக்கப்பட்ட கரும்பு சக்கையில் 90 யூனிட் மின்சார உற்பத்தி செய்ய முடியும். 40 கிலோ மொலாசஸ் கிடைக்கும், அதன் மூலம் 10 லிட்டர் எரி சாராயம் தயாரிக்கலாம். விஸ்கி, பிராந்தி தயாரிப்பதற்கு எரிசாராயம் தான் அடிப்படை மூலப்பொருள் என்பது அனைவரும் அறிந்ததே.கரும்பைக் கொண்டு இவ்வளவு லாபத்தை யார், யாரோ பெறுகிற பொழுது, கரும்பு விளைவிக்கிற விவசாயிகள் மட்டும் போதிய வருவாய் இன்றி வாழ்நாள் முழுவதும் துன்பப்பட வேண்டுமா? ஏற்கனவே இருக்கிற உரத்தட்டுப்பாடு, உரவிலை உயர்வு, மின் தட்டுப்பாடு, விவசாய வேலைக்கு ஆள் கிடைக்காமை, பெட்ரோல், டீசல் விலை உயர்வு என அனைத்து விவசாயிகளும் அவதிப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.உணவுப் பொருட்கள் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ளது. நல்ல அரிசி 35 ரூபாய்க்கு குறைந்த விலையில் கிடையாது. துவரம் பருப்பு 1 கிலோ ரூ.70, உளுந்தம் பருப்பு ஒரு கிலோ ரூ.58, குண்டு மிளகாய் வத்தல் கிலோ ரூ.124, மேலும் விலைகள் உயரும் என்கிறார்கள். உயர்ந்துள்ள கல்விக் கட்டணங்களால் அனைத்து பிரிவு மக்களும் கஷ்டப்படுகிறார்கள்.சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் ஏற்கனவே கடந்த 27.01.2009 உடுமலைப்பேட்டையில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டம் ஒன்றே நடத்தினோம். தமிழக முதலமைச்சர் மனது வைத்தால் நிச்சயம் கரும்பு விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும். இதற்கு மத்திய அரசை வலியுறுத்தி டன் ஒன்றுக்கு ரூ.2000 பெற்றுத்தர முதலமைச்சர் அவசர நடவடிக்கையை எடுத்திட வேண்டும் என்று சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.