ஜனநாயகத்தை சாகடித்த கருணாநிதி: வைகோ
சென்னை , வியாழன், 14 மே 2009 (15:01 IST)
சென்னையில் நேற்று மனிதநேய மக்கள் கட்சியினர் மீது தி.மு.க.வினர் தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ம.தி.மு.க பொதுச் செயலர் வைகோ, கருணாநிதி முதலமைச்சர் பொறுப்பேற்ற நாள் முதல் ஜனநாயகத்தை சாகடித்து, காவல்துறையின் துணையுடன், குண்டர்களின் பேயாட்டம் நடந்த வண்ணம் இருக்கிறது என்றும் கருணாநிதி தர்பாரின் வன்முறைக் கொட்டம் இன்னும் அடங்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு நாளான நேற்று சென்னையில் ஆளும் கட்சி குண்டர்களும், ரவுடிகளும் திட்டமிட்டு மனிநேய மக்கள் கட்சியின் முன்னணி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் உருட்டுக்கட்டைகளாலும், இரும்புக் குழாய்களாலும் தாக்கியதில் இஸ்லாமிய சகோதரர்கள் படுகாயம் அடைந்தனர்.இது திட்டமிட்ட வன்முறைத் தாக்குதலாகும். இதுவரை நடைபெற்ற எந்தத் தேர்தலிலும் தலைநகர் சென்னையில் இஸ்லாமிய மக்கள் தாக்குதலுக்கு ஆளானதில்லை. ஆனால், முதலமைச்சரின் பேரன் போட்டியிடுகின்ற மத்திய சென்னையில் ஆளும் கட்சிக்கு தோல்வி ஏற்படும் என்பதால்தான் சிறுபான்மை மக்கள் மீது ஆத்திரத்தோடு தி.மு.க குண்டர்கள் இத்தாக்குதலை நடத்தி உள்ளனர்.கருணாநிதி முதலமைச்சர் பொறுப்பேற்ற நாள் முதல் ஜனநாயகத்தை சாகடித்து, காவல்துறையின் துணையுடன், குண்டர்களின் பேயாட்டம் நடந்த வண்ணம் இருக்கிறது.உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகரம் அதுவரை கண்டிராத கோர வெறியாட்டத்தை ஆளும்கட்சி குண்டர்கள் வாக்குச்சாவடிகளில் நடத்தியதில் எண்ணற்றோர் படுகாயமுற்றனர். வாக்காளர்கள் அடித்து விரட்டப்பட்டனர். வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றி ஆளுங்கட்சிக்கு ஆதரவாக ரவுடிகளே வாக்குகளைப் போட்டனர் என்பதால்தான் கொடிய நரகம் சென்னை நகர் பூமியில் பிரவேசித்தது என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் சவுக்கால் அடித்தனர்.ஆனால், கருணாநிதி தர்பாரின் வன்முறைக் கொட்டம் அடங்கவில்லை. மதுரை மாநகரில் முதலமைச்சரின் மகன் படுகொலைகளை ஏவிவிட்டு நடத்தி முடித்தபின் முதல்வரின் பாராட்டுகளோடு பவனி வருகிறார். தமிழ்நாட்டில் தற்போது இடிஅமீன் ஆட்சி நடைபெறுகிறது. தாக்கப்பட்ட வர்களையே போலீசார் கைது செய்யும் அக்கிரமம் நடக்கிறது.மனிதநேய மக்கள் கட்சியினர் மீது ஆளுங்கட்சி நடத்திய தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிப்பதோடு, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இல்லையேல் நடத்தப்பட்ட அராஜகத்துக்கு விளைவுகளை அனுபவிக்க நேரும் என எச்சரிக்கிறேன்'' என்று வைகோ கூறியுள்ளார்.