Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக மக்கள் பொங்கி எழ வேண்டும் : ராமதாஸ்

Webdunia
" இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றுவதற்காக தமிழக மக்கள் சட்டத்துக்கு உட்பட்டு, பொங்கி எழுந்து குரல் கொடுக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கோரியுள்ளார்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில ், இலங்கையில் தமிழ் சாதியைக் காப்பாற்றுக என்று கண்ணீர் மல்க கேட்கிறோம் என்று இந்திய பேரரசுக்கு வேண்டுகோள் விடுக்கும் தீர்மானம் இந்த ஆண்டு ஜனவரியில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சரால் முன்மொழியப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. ஆனால், எதுவும் நடக்கவில்லை.

இந்தியப் பேரரசு அசைந்து கொடுக்கவில்லை. ''பேசியிருக்கிறோம், சொல்லியிருக்கிறோம், வேண்டுகோள் விடுத்திருக்கிறோம். வற்புறுத்தியிருக்கிறோம்'' என்று சொல்லி, காலத்தைக் கடத்தி வந்திருக்கிறார்களே தவிர, இலங்கையில் போர் நிறுத்தப்படுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த அவகாசத்தில் இலங்கையில் தமிழினம் தொடர்ந்து அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இதுவரையில் நாள்தோறும் நடந்தேறிய கொடுமைகளைவிட, இனிமேல் நடக்கப் போவது கொடுமையிலும், கொடுமையாக இருக்கப் போகின்றது என்று தமிழர்களையெல்லாம் கலங்க வைக்கும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. புதுக்குடியிருப்பு பகுதி முழுவதும் தங்கள் வசம் வந்துவிட்டதாகவும், இனி பாதுகாப்பு வளையம் மட்டுமே எஞ்சியுள்ளதாகவும் இலங்கை அதிபரும், அவரது பிரதானிகளும் அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் பாதுகாப்பு வளையத்திற்குள் போராளிகளும் இருக்கிறார்கள் என்று திட்டமிட்டு அவர்களால் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.

அதைக் காரணமாகக் காட்டி பாதுகாப்பு வளையத்திற்குள் சிக்கியிருக்கும் இரண்டரை லட்சம் தமிழ் மக்களின் உயிரைப் பொருட்படுத்தாமல், பெருமளவிலான தாக்குதலை நடத்துவதற்கு மனிதநேயமற்ற மாபாவிகள் திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள். பாதுகாப்பு வளையத்தினை ஐந்து முனைகளிலிருந்து சுற்றி வளைத்து ஒரே சமயத்தில் தாக்குதல் நடத்தப்போவதாக இனவெறி பிடித்த சிங்கள ராணுவத் தளபதி கொக்கரிப்பு செய்திருக்கிறார்.

இனி தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் இலங்கைத் தமிழர்களின் தலையின் மேல் நச்சு வாயு குண்டுகள் இடியாய் விழப்போகின்றன. தமிழர்கள் கூட்டம் கூட்டமாக செத்து மடியப் போகிறார்கள். இந்த கொடுமை நடந்தேறினால், உலகில் இதுவரையில் நடந்திராத இனப் படுகொலை இலங்கையில் அரங்கேறிவிடும்.

இந்த ஆபத்தை எப்பாடுபட்டேனும் தடுத்தாக வேண்டிய கடமையும், பொறுப்பும் தாயகத்துத் தமிழர்களுக்கு இருக்கிறது. இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்ற மாநிலத்தில் நாம் வாழ்கின்றோம்; அதனால், நம்மை அரவணைத்துக் காத்திடும் பொறுப்பை இந்தியப் பேரரசு பார்த்துக் கொள்ளும். ஆம், பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற உரிமையோடு எதிர்பார்க்கிறோம்.

நமக்குப் பாதுகாப்பு தருவதாயினும், பாதிப்பை களைவதாயினும், இரண்டையும் சீர்தூக்கி செயல்படுத்தி இந்த மாநில மக்களுக்கும், இந்த மாநில மக்களாம் தமிழ் குடி மக்களின் நலத்திற்கும், நமது தொப்புள்கொடி உறவு கொண்ட இலங்கை தமிழ் மக்களின் நலத்திற்கும் உத்தரவாதம் அளிக்கக் கூடிய பொறுப்பு மத்திய ஆட்சியின் கரங்களில் இருக்கிறது.

அந்தக் கரங்களைப் பிடித்துக் கொண்டு கேட்கிறோம், இலங்கையில் சீரழியும், செத்துமடியும் எங்கள் தமிழ் ஜாதியை காப்பாற்றுங்கள் என்று கண்ணீர் மல்க கேட்கிறோம் என்ற சட்டப்பேரவையின் முழக்கத்தை முதலமைச்சருக்கு மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன். அழிந்து கொண்டிருக்கும் தமிழினத்தை காப்பாற்றுங்கள் என்று மத்திய அரசின் செவிகளில் விழும்படி உரக்க குரல் கொடுங்கள். அதற்கான முழு பொறுப்பும், கடமையும் தமிழக அரசுக்கும், அதற்கு தலைமையேற்று நடத்துகின்ற முதலமைச்சருக்கும் இருக்கிறது.

இந்த கடமையை அவர்கள் தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும். இந்த ஆபத்தான நேரத்தில் இந்திய அரசு தலையிட்டு இலங்கைத் தமிழர்களை காக்கத் தவறினால் இலங்கையில் தமிழின அழிப்புப் போருக்கு இந்தியா மறைமுகமாக உதவிக் கொண்டிருக்கிறது என்ற கருத்து உறுதிப்படுத்தப்பட்டுவிடும் என்பதை எச்சரிக்கை கலந்த குரலோடு எடுத்துச் சொல்லுங்கள்.

தமிழக மக்களும் இந்த நேரத்தில் ஒன்றுபட்டு சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பொங்கி எழுந்து குரல் கொடுக்க வேண்டும். இதன் மூலம் இலங்கையில் நமது சொந்தங்கள் கூண்டோடு செத்து மடிவதை தடுக்க உதவ வேண்டும் எ‌ன்று ராமதாஸ் கூறியுள்ளார்.

இது கூடத் தெரியாதது நகைப்பை ஏற்படுத்துகிறது.. தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி..!

அரசு சட்டக் கல்லூரிகளில் பேராசிரியர் பணி.. விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு..!

நீங்கள் எல்லாம் கூடி அடித்த கமிஷன் எவ்வளவு? அண்ணாமலைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி..

இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை: ஐக்கிய அரபு அமீரகத்தின் அறிவிப்பு

ஜிபிஎஸ் நோய்க்கு 10ஆம் வகுப்பு மாணவி பலி.. கேரள சுகாதாரத்துறை அதிர்ச்சி..!

Show comments