' பறக்கும் சாலைத் திட்டம்' தேவையற்ற, சுற்றுச்சூழலுக்கு பேரிடரை ஏற்படுத்துகிற, கடற்கரையை அழிக்கிற திட்டமாகும் என்று தெரிவித்துள்ள பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், இத்திட்டத்தைக் கைவிடுவதற்குத் தொடர்புடைய அரசு துறைக்கு முதலமைச்சர் ஆணையிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
webdunia photo
FILE
இத ு தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில ், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலையிலிருந்து கிழக்கு கடற்கரை சாலை வரையில் இணைக்கும் 'கடற்கரை பறக்கும் சாலைத் திட்டத்தின்' முதல் கட்டப் பணிக்கான கருத்துரையாளர்களின் இறுதி சாத்தியக்கூறு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் விரைவில் பணிகள் தொடங்க இருப்பதாக செய்தி வெளிவந்திருக்கின்றன.
முதல் கட்டமாக மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் காந்தி சிலை அருகில் இருந்து தொடங்கும் இந்தப் `பறக்கும் சாலை', சீனிவாசபுரம் வழியாக அடையாறு ஆற்றின் கழிமுகப் பகுதியை இப்போதுள்ள உடைந்த பாலத்தின் மேற்கு பக்கமாக கடந்து, அடையாறு பிரம்மஞான சபை வளாகத்தின் கிழக்கு பக்கமாக சென்று, உரூர் குப்பத்தை அடைந்து எல்லியட்ஸ் கடற்கரை அருகே பெசன்ட் நகர் 5-வது நிழற்சாலையில் போய்ச் சேரும்.
இரண்டாம் கட்டத்தில், இந்த பறக்கும் சாலை பெசன்ட் நகர் கடற்கரை சாலையிலிருந்து நீட்டிக்கப்படும். இச்சாலை வேளாங்கண்ணி ஆலயத்துக்கு அருகே கிழக்காக திரும்பி கடற்கரையைச் சென்றடைந்து, அங்கிருந்து கடற்கரையை ஒட்டியே கொட்டிவாக்கம் குப்பம் வரையில் சென்று கிழக்கு கடற்கரை சாலையில் போய்ச்சேரும் என்று திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. முதல் கட்டச் சாலை அமைக்கப்படும் போது 529 வீடுகளும், 14 வணிகக் கட்டிடங்கள், மதத் தொடர்பான 3 கட்டிடங்களும் இடிக்கப்படும் ஆபத்து இருக்கிறது. இடிக்கப்படும் இந்த வீடுகளில் பெரும்பாலானவை ஏழை மக்களுக்கும், குறைந்த வருவாய்ப் பிரிவினருக்கும் சொந்தமானவை. இரண்டாம் கட்டச் சாலை அமைப்பதற்கு எத்தனை ஆயிரம் வீடுகள் இடிக்கப்படும் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.
கடலை ஒட்டி மிக நெருக்கமாக 5.5 மீட்டர் உயரத்தில் செல்லும் இந்தப் 'பறக்கும் சாலை' சென்னை மாநகரின் பெருமைக்குரிய சின்னமாகவும், உலகிலேயே நீளமான இரண்டாவது கடற்கரையாகவும் கருதப்படுகிற, மெரினா மற்றும் எல்லியட்ஸ், திருவான்ம ிய ூர் கடற்கரைகளை அடையாளம் தெரியாமல் அழித்துவிடும் ஆபத்து இருக்கிறது. ஒரு புறத்தில் சென்னை மாநகராட்சி பல கோடி ரூபாய் செலவில் 'கடற்கரையை அழகுபடுத்தும்' பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டிருக்கும் வேளையில், நகருக்கு அழகு சேர்க்கும் அனைத்துக் கடற்கரைகளையும் ஒரே மூச்சில் அழித்துவிடக்கூடிய 'பறக்கும் சாலை' திட்டத்தை செயல்படுத்த முயல்வது விந்தையாக இருக்கிறது.
மீனவர் குப்பங்கள் 'தற்காலிகமாக மட்டுமே' பாதிக்கப்படும் என்று கூறுவது நம்பும்படியாக இல்லை. ஆயிரக்கணக்கான மீனவர்கள் வாழ்கிற, அவர்களின் வாழ்க்கைக்கு ஆதாரமாக விளங்குகின்ற மீனவ குடியிருப்புகளில் குறைந்தது ஐந்து குடியிருப்புகளாவது முற்றிலும் அகற்றப்பட்டுவிடும் ஆபத்து இருப்பதாக சென்னை பெருநகர வளர்ச்சியில் ஆர்வமும், அக்கறையும் செலுத்தி வரும் நிபுணர்கள் கூறுகிறார்கள். பறக்கும் சாலைத் திட்டத்திற்காக முதலில் குடியிருப்புகளை அகற்றிவிட்டு பிறகு, வலிமையும் செல்வாக்கும் மிக்க, வீடு-மனைத் தொழில் உரிமையாளர்களின் வணிகச் சுரண்டலுக்கு அந்த நிலம் திறந்துவிடப்பட்டுவிடும் என்று சுட்டிக்காட்டப்படுகிறது. `பறக்கும் சால ை' திட்டத்துக்குப் பின்னால் மறைந்திருக்கும் உண்மையான செயல் திட்டமே இதுதான் என்று எண்ணத் தோன்றுகிறத ு.
இந்த பறக்கும் சாலை, கடலோர மண்டல ஒழுங்குமுறைகளையும், அது தடை செய்திருப்பவற்றையும் மீறுவதாக உள்ளது. இந்த பறக்கும் சாலையை அமைப்பது, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முதன்மையான, அரசு கானகத் துறையினரால் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ள அடையாறு கழிமுகப் பகுதிக்கும், கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள கடல் ஆமைகள் குஞ்சு பொரிக்கும் பகுதிக்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். சென்னையின் பெருமைக்குரிய மற்றொரு சின்னமான, உலகப் புகழ்பெற்ற அடையாறு பிரம்மஞான சபை வளாகத்தின் இயற்கை எழிலுக்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் ஆபத்து இருக்கிறது.
இந்த பறக்கும் சாலை, சென்னை மாநகரின் நடுப்பகுதியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலைக்கு இணைப்பை மேம்படுத்தும் என்றும், போக்குவரத்தை எளிதாக்கும் என்றும் இத்திட்டத்தின் கருத்துரையாளர்கள் கூறுகின்றனர். இதுதான் இத்திட்டத்தின் குறிக்கோள் என்றால், நிறையபேர்களை ஏற்றிச் செல்லக்கூடிய ஹோவர்கிராப்ட் போன்ற நவீனப் படகுகளைப் பயன்படுத்தி சென்னை கடற்கரையை ஒட்டி நீர்வழிப் போக்குவரத்தை உருவாக்குவதன் மூலம் அந்த குறிக்கோளை எட்ட முடியும். இந்த படகுகள் நிலத்திலும், நீரிலும் செல்லக்கூடியவை என்பதால் இதற்கான அடிப்படைக் கட்டமைப்பு செலவு குறைவுதான். அதிலும் 9.7 கி.மீ. தொலைவு பறக்கும் சாலைத் திட்டத்துக்கு செலவிட இருக்கும் ரூ.1,000 கோடியில் ஒரு சிறு பகுதி தொகை இதற்கு போதுமானது.
முடிவாக தொகுத்து சொன்னால், இந்த 'பறக்கும் சாலைத் திட்டம்' தேவையற்ற, பொருளாதார அடிப்படையில் அதிகம் செலவாகக் கூடிய, சுற்றுச்சூழலுக்கு பேரிடரை ஏற்படுத்துகிற, கடற்கரையை அழிக்கிற, பெரும்பாலும் ஏழைகளுக்கும், பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கும் சொந்தமான வாழ்விடங்களையும், வாழ்வாதாரங்களையும் வேருடன் பிடுங்கி எறிகிற, வீடு-மனை விற்பனைத் தொழில் திமிங்கலங்கள் கொழுப்பதற்கு தீனி போடுகிற திட்டமாகும். மேலும் எந்த வகையிலும் மக்களைக் கலந்தாய்வு செய்யாமல் தன்னிச்சையாக அறிவிக்கப்பட்டுள்ள திட்டமாகும்.
இந்த காரணங்களின் அடிப்படையில், இந்த வ ி டயத்தில் முதலமைச்சர் கருணாநிதி தலையிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மக்களுக்கு எதிரான, சுற்றுச்சூழலுக்கு எதிரான இத்திட்டத்தைக் கைவிடுவதற்குத் தொடர்புடைய அரசு துறைக்கு முதலமைச்சர் ஆணையிட வேண்டும். இதற்கு மாற்றாகக் கடலோர நீர்வழிப் போக்குவரத்தை ஏற்படுத்தல், சாலைகளின் இடத்தையும், பேருந்துப் போக்குவரத்தையும் அதிகப்படுத்தல் முதலிய மிகவும் அறிவார்ந்த, செலவு குறைவான மாற்றுத் திட்டங்களைச் செயல்படுத்த அரசு முன்வரவேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.