மறைந்த பின்னரும் மறக்க முடியாத மாமனிதராய் தமிழக மக்கள் நினைவில் என்றென்றும் நிற்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளில் மக்களுக்குச் சேவை செய்வோம் என்று தெரிவித்துள்ள அ.தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதா, நாளை நமதே, நாற்பதும் நமதே என்னும் குறிக்கோளை அடைவோம் என உளமாற உறுதி ஏற்போம் என்று கூறியுள்ளார்.
webdunia photo
FILE
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில ், அ.இ. அ.தி.மு.க. நிறுவனர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 92-வது பிறந்த நாளை கொண்டாட இருக்கும் இத்தருணத்தில் அவரது பண்புகளை, மனித நேயத்தை, வள்ளல் தன்மையை எனதருமை கழக உடன்பிறப்புகளாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் பேருவகை அடைகிறேன்.
புரட்சித்தலைவருக்கு கிடைத்த வெற்றி என்பது இயற்கையானது, இமயம் போன்றது. அப்படிப்பட்ட வெற்றியை எட்டிப்பிடிக்க முயன்றவர்கள் சறுக்கி விழுந்து விட்டனர். இத்தகைய இயற்கை தன்மையின் மீது மோதிக் காணாமல் போனவர்கள் எத்தனையோ பேர். புரட்சித்தலைவர் மறைவிற்குப்பிறகு, இரண்டாகப் பிளவுபட்ட அவர் கண்ட இயக்கத்தை ஒன்றிணைத்து, முடக்கப்பட்ட இரட்டை இலைச் சின்னத்தை மீட்டு, வெற்றிச் சரித்திரத்தைப் படைக்க நான் பட்ட துயரங்கள், சுமந்த காயங்கள், தாங்கிக் கொண்ட வேதனைகள் எத்தனை எத்தனை என்பதை எல்லாம் என தருமைக்கழக உடன் பிறப்புகளாகிய நீங்கள் நன்கு அறிவீர்கள்.
புரட்சித் தலைவரின் ஆட்சியை மீண்டும் அமைக்க நான் பட்ட துன்பங்கள், துயரங்கள் கொஞ்சநஞ்சமல்ல. புரட்சித்தலைவர் விட்டுச் சென்ற பணிகளை தொடர்ந்தேன். இரண்டு முறை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் கழகத்தின் வெற்றிப்பதாகை பட்டொளி வீசிப்பறக்க எனது உழைப்பை காணிக்கையாக்கினேன ்.
தமிழ்நாட்டின் தற்போதைய பிரதான எதிர்க்கட்சியான அ.இ. அ.தி.மு.க., தி.மு.க. அரசின் செயல்களைச்சுட்டிக் காட்டி ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் ஆகியவற்றை நடத்தி வருவதோடு மட்டுமல்லாமல், மக்களுக்குச் சேவை செய்வதிலும் முனைப்பு காட்டி வருகிறது. ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும், மக்கள் பணி என்பதே கழகத்தின் குறிக்கோள்.
எனக்கென்று ஒரு தனிப்பட்ட வாழ்க்கையே இல்லாமல், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும், கழகத்தின் வளர்ச்சிக்காகவும், தமிழக மக்களின் உயர்வுக்காகவும், கழக உடன்பிறப்புகளாகிய உங்களின் உயர்வுக்காகவும் தான் ஒவ்வொரு நொடியும் உழைத்து வருகிறேன். எனதருமைக் கழக உடன்பிறப்புகளாகிய நீங்கள் தொய்வின்றி மக்கள் பணியாற்றி, துணிச்சலாக செயலாற்ற வேண்டும். துணிந்து செயல்படுகிறவர்களுக்குத்தான் வெற்றி கிட்டும். நாளைய வெற்றி நமக்காகக் காத்திருக்கிறது.
வானத்தையே வசப்படுத்தும் வலிமை மிக்க மக்கள் தலைவராம் புரட்சித் தலைவரின் பிறந்த நாளில், பேரறிஞர் அண்ணாவின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற நெறிமுறையை பின்பற்றி, உழைப்பே உயர்வுக்கு துணை என்ற கோட்பாட்டின் அடிப்படையில், விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தலில் அராஜகங்களை, வன்முறை வெறியாட்டங்களை, நிர்வாகத் திறமையின்மையை மக்கள் முன் எடுத்து வைத்து, துணிச்சலுடன் தேர்தல் பணியாற்றி, வெற்றிக் கனியை பறிப்போம். அ.இ. அ.தி.மு.க. ஆட்சியை விரைவில் மலர செய்வோம் என சூளுரைப்போம்.
மறைந்த பின்னரும் மறக்க முடியாத மாமனிதராய் தமிழக மக்கள் நினைவில் என்றென்றும் நிற்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளில் மக்களுக்குச் சேவை செய்வோம். நாளை நமதே, நாற்பதும் நமதே என்னும் குறிக்கோளை அடைவோம் என உளமாற உறுதி ஏற்போம்.
நம் இதய தெய்வம் எம்.ஜி.ஆரின் 92-வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் ஆங்காங்கே கம்பீரமாக நிற்கும் நம் கழகக் கொடிக்கம்பங்களுக்கு வண்ணங்கள் பூசி, கழகக் கொடியினை ஏற்றி வைத்து, எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலைக்கு அல்லது படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி, உவகையுடன் கொண்டாட வேண்டும் என்று உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.