தமிழக ரயில்வே திட்டங்களுக்கு தமிழக அரசு அக்கறை எடுத்துக் கொள்ளாததைப்போல, ரயில்வே இணை அமைச்சர் வேலு தெரிவித்திருப்பதற்கு மிகுந்த வருத்தத்தைத் தெரிவிப்பதோடு, எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.
webdunia photo
FILE
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக ரயில்வே திட்டங்களுக்கு 'மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லை' என்ற ஒரு குற்றச்சாற்றை ரயில்வே இணை அமைச்சர் வேலு கூறியிருப்பது மிகவும் வருந்தத்தக்கது. சேலம் ரயில்வே கோட்டம் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்ததற்கு கேரளாவில் இருப்பவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நான் ரயில்வே இணை அமைச்சர் வேலுவை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு, சேலம் ரயில்வே கோட்டம் அமைய நடவடிக்கை எடுங்கள் என்று கேட்டுக் கொண்டேன்.
" என்னால் முடிந்த அளவுக்கு முயற்சி செய்தும் சேலம் ரயில்வே கோட்டம் அமைவது சந்தேகமாக உள்ளது. தமிழக முதலமைச்சரிடம் எடுத்துக்கூறி, பிரதமர் மற்றும் மத்திய ரயில்வே அமைச்சர் லல்லு பிரசாத் யாதவுக்கு கடிதம் எழுதச் சொல்வதோடு, நீங்களும் முயற்சி எடுக்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.
அதற்கு அவரிடம் நான், மத்திய அரசு அறிவித்தபடி சேலம் ரயில்வே கோட்டம் தொடங்கப்பட வேண்டும் என்றும், அவ்வாறு ரயில்வே கோட்டம் அமைக்கப்படாவிட்டால் போராட்டம் நடத்துவேன் என கூறினேன். முதலமைச்சரின் அறிவுரையின்பேரில் அறவழியில் ரயில் மறியல் போராட்டம் நடத்தினோம்.
அதன் எதிரொலியாக, பிரதமர் அலுவலகத்திலிருந்து மத்திய ரயில்வே அமைச்சருக்கு தகவல் தந்து, "சேலம் ரயில்வே கோட்டம் தொடங்கப்படும்'' என தமிழக முதலமைச்சரிடம் உறுதியளிக்கப்பட்டது. இத்தகவலை சொல்லி முதலமைச்சர் கேட்டுக் கொண்ட பிறகு மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. சேலம் ரயில்வே கோட்டத்துக்கு நான் காட்டிய 100 ஏக்கர் நிலத்தை என்ன காரணத்தினாலோ அந்த இடம் வேண்டாம் என வேலு மறுத்துவிட்டார்.
பின்னர், பழைய சூரமங்கலம் ரயில்வே குடியிருப்புக்கு அருகில் உள்ள இடத்தைக் காண்பித்து, அந்த இடத்தை ரயில்வே கோட்டத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும், இதனை ஒட்டியுள்ள பழைய சூரமங்கலம் பகுதியில் உள்ள இடத்தில் ரயில்வே அலுவலர் குடியிருப்பை கட்டிக்கொள்ளலாம் எனவும் தெரிவித்தபோது, அதற்கு அவர் ரயில்வே கோட்ட அலுவலகம் கட்ட இந்த இடம் போதுமானது, ஆனால் நீங்கள் சொல்லுமிடத்தில் அலுவலர் குடியிருப்புக் கட்ட இடம் போதாது என்று தெரிவித்தார்.
அதன் பின்பு அழகாபுரம் கிராமத்தில் உள்ள 35 ஏக்கர் கோயில் நிலத்தில், 25 ஏக்கர் நிலத்தை அலுவலர்கள் குடியிருப்பு கட்ட, இந்து அறநிலையத்துறை இலாகாவின் அனுமதி வழங்க அரசு தயார் என்றும் அதற்கான நில மதிப்பீட்டுத் தொகையை செலுத்திவிட்டு, ரயில்வே துறை எடுத்துக்கொண்டு ரயில்வே அலுவலர் குடியிருப்பு கட்டலாம் என்று தெரிவித்து, மாவட்ட ஆட்சித் தலைவர் மூலமாக ரயில்வே அமைச்சர் அலுவலகத்துக்கு பலமுறை கடிதம் எழுதியும், பதிலே தராமல் இருப்பது ரயில்வே துறைதான். ஆனால், இதில் தமிழக அரசு அக்கறை எடுத்துக் கொள்ளாததைப்போல, ரயில்வே இணை அமைச்சர் வேலு தெரிவித்திருப்பதற்கு மிகுந்த வருத்தத்தைத் தெரிவிப்பதோடு, எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று வீரபாண்டி ஆறுமுகம் கூறியுள்ளார்.