என்னதான் திட்டமிட்டுத் தாக்குதல் நடந்தாலும், அதனைத் தாங்கிக் கொண்டு தேர்தல் பணியாற்றிட வேண்டுமேயல்லாமல், பாதுகாத்துக் கொள்ளக்கூட கை கால்களை அசைக்கவும் கூடாது. அந்த அளவுக்கு அமைதி காத்து, நாம் அறவழியில் நடப்பவர்கள் என்பதை நாட்டுக்கு உணர்த்திட வேண்டும் என்று தி.மு.க.வினருக்கும், கூட்டணி கட்சியினருக்கும் முதலமைச்சர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
webdunia photo
FILE
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், திருமங்கலம் இடைத்தேர்தல் அமைதியாக நடைபெறுவதற்குப் பெரிதும் விரும்பி, நடவடிக்கைகள் எடுத்து வருகிற இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு ஒத்துழைப்பு தருவதற்குத் தமிழக அரசு தயாராக இருக்கிறது.
இதற்கு உதாரணமாக, எந்த அதிகாரிகளை எங்கே மாற்றுவது என்பது போன்று எதிர்க்கட்சியினர் கூறும் கோரிக்கைகளை தேர்தல் ஆணையம் ஏற்று, அவ்வாறு நடவடிக்கை எடுத்தால், அதற்கும் உடன்பட்டுச் செயல்படவும் இந்த அரசு இதுவரை எவ்விதத் தயக்கமும் காட்டிய தில்லை. இனியும் காட்டப் போவதுமில்லை.
திருமங்கலத்தில் வெற்றி பெற வேண்டியது அமைதியும், ஜனநாயகமும்தான் என்பதில் இந்த அரசுக்கு இருவேறு கருத்துக்கள் இல்லை. இதனை இந்த அரசின் முதலமைச்சர் என்ற முறையில் தெரிவித்துக்கொள்ளும் நான், இடைத்தேர்தல் களத்தில் நிற்கும் அரசியல் கட்சிகளில் ஒன்றான தி.மு.க.வின் தலைவர் என்ற முறையில் கழக அணியில் உள்ள தோழமைக்கட்சிகளின் நண்பர்கள், தொண்டர்கள் அனைவரையும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
'' என்னதான் உங்கள் மீது திட்டமிட்டுத் தாக்குதல் நடந்தாலும், அதனைத் தாங்கிக் கொண்டு தேர்தல் பணியாற்றிட வேண்டுமேயல்லாமல், பாதுகாத்துக் கொள்ளக்கூட கை கால்களை அசைக்கவும் கூடாது. அந்த அளவுக்கு அமைதி காத்து, நாம் அறவழியில் நடப்பவர்கள் என்பதை நாட்டுக்கு உணர்த்திட வேண்டும் என்று கைகூப்பி வேண்டுகிறேன்.
எதையாவது செய்து அல்லது எதையாவது சொல்லி தேர்தலையே நிறுத்திவிட முடியாதா என்று எண்ணும் ஜனநாயக விரோதிகளுக்கு இடம் கொடுக்காமல் அமைதி காத்திட, அரசுடனும், ஆணையத்துடனும் ஒத்துழைக்க வேண்டுகிறேன் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.