இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும், இலங்கை அரசுக்கு இந்திய அரசு ராணுவ ரீதியான உதவிகள் அளிக்க கூடாது ஆகி ய முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் ஒன்றுபட்டு நடத்தி வரும் போராட்டங்களை சீர்குலைக்கும் வகையிலும், அதை திசை திருப்பவும் தமிழக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலர் செயல்பட்டு வருகின்றனர் என்று தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்பு குழுவின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் குற்றம் சாற்றியுள்ளார்.
webdunia photo
FILE
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும், இலங்கை அரசுக்கு இந்திய அரசு ராணுவ ரீதியான உதவிகள் அளிக்க கூடாது ஆகிய இரு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் ஒன்றுபட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் போராட்டங்களை சீர்குலைக்கும் வகையிலும் பிரச்சனையை திசை திருப்பவும் தமிழக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலர் செயல்பட்டு வருகின்றனர். தமிழகமே ஒன்றுபட்டு நிற்கும்போது இவர்கள் வேண்டும் என்றே திட்டமிட்டு சிங்கள அரசுக்கு ஆதரவான போக்கில் நடந்து கொள்வதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
ஈழத்தமிழர்களின் துயரைத் துடைப்பதற்காக மக்களை திரட்டும் பணியில் ஈடுபட்டிருக்கக்கூடிய பல தலைவர்களை கைது செய்ய வேண்டும் என இவர்கள் கூக்குரல் இடுகின்றனர்.
இந்திய அரசியல் சட்டம் வழங்கியிருக்கும் பேச்சுரிமை, கருத்துரிமை ஆகியவற்றை பறிக்கும் வகையில் செயல்படும் இவர்களின் அநீதியான கோரிக்கைக்கு தமிழக அரசு பணிந்து பல தலைவர்களை கைது செய்து சிறையில் அடைத்திருப்பது அப்பட்டமான ஜனநாயக உரிமைகள் மீறலாகும் என்று பழ.நெடுமாறன் குற்றம்சாற்றியுள்ளார்.