திருமாவளவனை கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ள காங்கிரஸ்சாரின் உணர்வை குறைத்து மதிப்பிட முடியாது என்று கூறிய தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வி.தங்கபாலு, காங்கிரஸ் கட்சி விவகாரங்கள் பற்றி பேச திருமாவளவனுக்கு அருகதை இல்லை என்றார்.
இது பற்றி திருமாவளவன் என்னிடம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவருடைய கட்சியினர் தாக்குதலில் ஈடுபடவில்லை என்று கூறினார். நான் அவரிடம் வீடியோவில் பதிவாகி இருக்கும் காட்சிகளை பார்த்து விட்டு சொல்லுங்கள் என்றேன். காங்கிரஸ்காரர்கள் தாக்கியதாக கூறினார். காங்கிரஸ்காரர்கள் யாரையும் தாக்க மாட்டார்கள ். நடந்த சம்பவத்துக்காக திருமாவளவன் என்னிடம் வருத்தம் தெரிவித்து கொண்டார்.
இந்த சம்பவம் குழப்பத்தை ஏற்படுத்த வேறு கட்சியினரால் தூண்டிவிடப்பட்ட செயல் என்று திருமாவளவன் சொல்லி இருக்கிறார். காங்கிரஸ் கட்சி விவகாரங்கள் பற்றி பேச திருமாவளவனுக்கு அருகதை இல்லை. ஒரு கட்சி அலுவலகத்தில் மாற்று கட்சியினர் நுழைவது நல்ல பண்பு அல்ல.
தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் திருமாவளவனை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள். அவர்களின் உணர்வை குறைத்து மதிப்பிட முடியாது. தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்க வேண்டும் என்று விரும்புகிறோம். எங்கள் தயவில் ஆட்சி நடக்கும் மாநிலத்தில் சோனியாவுக்கு ஏற்பட்ட இழிவு செயலை நினைத்து வருந்துகிறோம்.