தலைவர், பொதுச் செயலரை தேர்ந்தெடுக்க தி.மு.க பொதுக்குழு கூட்டம் வரும் 27ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது என்று கட்சியின் பொதுச்செயலர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
TN.Gov.
TNG
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனநாயக பேரியக்கமாம் தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் சென்னை கலைஞர் அரங்கில் வரும் 27ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு நடக்கிறது. இந்த பொதுக்குழுவில் கட்சித் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் பொறுப்புகளுக்கான தேர்தலும், தணிக்கை குழு உறுப்பினர்களுக்கான தேர்தலும் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அண்ணாவால் தோற்றுவிக்கப்பட்ட பேரியக்கமாம் தி.மு.க., அண்ணா வகுத்தளித்த நெறிமுறைகளின்று சிறிதும் பிறழாமல், தலைவர் கருணாநிதியின் தலைமையின் கீழும் அவரது வழிகாட்டுதலோடும் தமிழ்கூறு நல்லுலகிற்கு ஆற்றியுள்ள பணிகள் ஏராளம்.
உலகம் எங்கும் வாழும் தமிழர்களுக்கு எல்லாம் பெரும் காவல் அரணாகத் திகழும் தி.மு.க., ஆட்சியில் இருக்கிற காலங்களில் மக்களுக்கு செய்திருக்கிற நன்மைகளை பட்டியலிட்டால் பக்கங்கள் காணாது. எதிர்க்கட்சி வரிசையில் அமருகிற காலங்களிலும் தலைவர் கருணாநிதியும், அவர் வழிநடத்தும் கட்சியும், தமிழர் நலனுக்காக செய்திட்ட தியாகங்களை எடுத்துரைத்தால் விழிகளில் நீர் பெருகும். அத்தகைய தியாக வரலாறு கண்டது தி.மு.க.
' ஒரு இனத்தின் நலன் காக்க இத்தனை ஆண்டு காலம் இடைவிடாமல், அயராமல் பாடுபடுகிற தி.மு.க. போன்று ஒரு இயக்கம் உலகில் இதுவரை தோன்றிடவில்லை' என்று மாற்றுக்கருத்து கொண்டவர்களும் மனமுவந்து பாராட்டும் அளவுக்கு தி.மு.க.வும் தலைவர் கருணாநிதியும் பிரித்துப் பார்க்க முடியாத இருபெரும் சக்திகளாக திகழ்வது கட்சியினர் எல்லாம் பெருமிதம் கொள்ளக்கூடிய ஒன்று.
உலகத்தில் அனைத்து இயக்கங்களும் தலைசிறந்த முன்னோடி இயக்கமாகத் திகழும் தி.மு.க., ஜனநாயக வழிகளின்று சிறிதளவும் பிறழாமல் அதன் ஆயிரம் கிளை நிர்வாகிகள் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படவும் அதன் வாயிலாக கட்சியின் ஏனைய அமைப்புகளுக்குரியோர் முறையாக தேர்ந்தெடுக்கப்படவும் தேர்தல்களின் நிறைவாக கட்சித் தலைமை நிர்வாகிகள் வரை ஜனநாயக முறை தழைத்தோங்க கண்ணும் கருத்துமாக பணியாற்றுபவர், பாடுபடுபவர் தலைவர் கருணாநிதி.
தி.மு.க.வின் 13-வது பொதுத்தேர்தல்களுக்கான நடைமுறைகளை வழக்கம்போல் கட்சி உறுப்பினர் சேர்த்தல், புதுப்பித்தலுக்கான அறிவிப்புடன் தொடங்கியது கட்சித் தலைமை. கடந்த ஜனவரி மாதம் 21ஆம் தேதியன்று தொடங்கிய உறுப்பினர் சேர்த்தல், புதுப்பித்தல் பணிகள் மே மாதம் 31ஆம் தேதி முடிவடைந்தன.
95 ஆயிரம் கிளைகளையும், ஒரு கோடிக்கும் மேற்பட்ட உறுப்பினர்களையும் கொண்ட தன்னகரில்லா இயக்கமாம் தி.மு.க. 4 கட்ட தேர்தல் நடைமுறைகளை கொண்டது. முதல்கட்டமாக, பேரூர், நகர, ஒன்றிய மாநகரங்களுக்கு உட்பட்ட கிளை நிர்வாகிகள் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டன. அந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளும் மேலமைப்பு பிரதிநிதிகளும், பேரூர், ஒன்றிய, நகர, மாநகர நிர்வாகிகளை தேர்ந்தெடுத்தனர். இது 2-ம் கட்ட தேர்தல் ஆகும்.
இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட பேரூர், ஒன்றிய, நகர, மாநகர நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்களையும், நிர்வாகிகளையும் தேர்ந்தெடுத்தனர். இது 3-ம் கட்ட தேர்தல். மாவட்ட நிர்வாகிகளுக்கான தேர்தல் முடிந்து கட்சியின் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் மற்றும் தணிக்கை குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் 4-ம் கட்ட தேர்தல் இந்த பொதுக்குழுவில் நடைபெறுகிறது.
ஈடு இணையில்லா இயக்கமான தி.மு.க.வின் தலைவராக, பேராற்றல்களின் அபரிமிதமான திறமைகளின் ஒருவராக திகழும் தலைவர் கருணாநிதி இதுவரை 9 முறை போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று அன்பழகன் தெரிவித்துள்ளார்.