ஆத்தூர் நகராட்சி நிர்வாகம் வீடுகளுக்கான சொத்து வரியை 20 விழுக்காடு அளவுக்கும், தொழிற்சாலைகளுக்கான சொத்துவரியை 50 விழுக்காடு அளவுக்கும் உயர்த்தியதை கண்டித்து ஆத்தூர் நகராட்சி அலுவலகம் முன்பு வரும் 4ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
webdunia photo
FILE
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் நகராட்சி மிகவும் வறட்சியான பகுதி என்பதால் அப்பகுதி மக்களின் குடிநீர்த் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் எனது ஆட்சிக் காலத்தில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேட்டூர் - ஆத்தூர் கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின்படி நாள் ஒன்றுக்கு 40 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. வறட்சி ஏற்பட்ட காலங்களில் கூட குடிநீர் விநியோகம் எப்போதும் போல் மூன்று நாட்களுக்கு ஒருமுறை விநியோகிக்கப்பட்டது.
தி.மு.க. ஆட்சியில் எந்தவிதமான இயற்கைத் தடையும் இல்லாத சூழ்நிலையிலும் கூட 12 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே ஆத்தூர் நகர மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாகவும், நீண்ட நாட்கள் குடிநீரை பாதுகாக்க முடியாததன் காரணமாக, ஆத்தூர் நகர மக்கள் பல விதமான உடல் உபாதைகளுக்கு ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள் என்றும், இது குறித்து ஆத்தூர் தி.மு.க. நகரமன்றத் தலைவரிடம் மக்கள் முறையிட்டும் குடிநீர் விநியோகம் சீராக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டுமே விநியோகிக்கப்படும் குடிநீருக்கு, ஒவ்வொரு மாதமும் 10 ஆம் தேதிக்குள் கட்டணம் செலுத்தவில்லை என்றால் 50 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது என்றும் செய்திகள் வருகின்றன.
அதே தருணத்தில், தி.மு.க. நகராட்சி நிர்வாகம் வீடுகளுக்கான சொத்து வரியை 20 விழுக்காடு அளவுக்கும், தொழிற்சாலைகளுக்கான சொத்துவரியை 50 விழுக்காடு அளவுக்கும், வணிக வள ா கங்களுக்கான சொத்துவரியை 75 விழுக்காடும் உயர்த்தி மக்களை சொல்லொணாத்துயரத்திற்கு ஆளாக்கியுள்ளது.
இதை கண்டித்து சேலம் புறநகர் கிழக்கு மாவட்ட அ.இ.அ.தி.மு.க சார்பில் 5 ஆம் காலை 10 மணி அளவில், ஆத்தூர் நகராட்சி அலுவலகம் முன்பு கண்டனப் போராட்டம் நடைபெறும் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.