Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் எம்.என். நம்பியார் மரணம்!

Webdunia
புதன், 19 நவம்பர் 2008 (15:54 IST)
முதுபெரும் நடிகர் எம்.என். நம்பியார் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 89.

கடந்த சில மாதங்களாகவே உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். வீட்டிலேயே படுத்த படுக்கையாக இருந்து வந்தார். அவரது நிலைமை இன்று காலை மிகவும் கவலைக்கிடமானது. பிற்பகல் 1.30 மணியளவில் நம்பியார் உயிர் பிரிந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் நம்பியாரின் உடல் வைக்கப்பட்டுள்ளது. முக்கியப் பிரமுகர்கள், சினிமா நடிகர்-நடிகைகள், பொதுமக்கள் நம்பியாரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

கடந்த 1935ஆம் ஆண்டில் இருந்து நடித்து வந்த, நம்பியாரின் வில்லத்தனமான நடிப்பிற்கு தமிழகத்தின் பட்டி-தொட்டியெல்லாம் பாராட்டு கிடைக்கப்பெற்றது.

அதிலும் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் பல படங்களில் நம்பியார் ஏற்று நடித்திருந்த வில்லன் வேடங்கள் அனைத்தும், அந்தப் படங்களின் வெற்றியில் முக்கியப் பங்காற்றின எனலாம். எங்கவீட்டுப் பிள்ளை, குடியிருந்த கோயில், நாடோடி மன்னன், ஆயிரத்தில் ஒருவன், உலகம் சுற்றும் வாலிபன், படகோட்டி, நாளை நமதே என எம்ஜிஆருடன் நம்பியார் வில்லனாக நடித்த படங்கள் அனைத்துமே சூப்பர்ஹிட் படங்களாக அமைந்தன.

வில்லன் நடிப்பு என்றாலே உடனடியாக நம் நினைவுக்கு வருபவர் நம்பியார். அவரது வில்லத்தனமான சிரிப்பு, கனல் பறக்கும் வசனங்கள், கட்டுடல்வாகு, ஹீரோக்களுடன் போடும் சண்டைகள், நிஜமாகவே மோசமான ஆளாக இருப்பாரோ என்று அந்தக் காலத்தில் ரசிகர்களை எண்ண வைத்தன எனலாம்.

எத்தனையோ ஹீரோக்களின் படங்களில் அவர் வில்லனாக நடித்திருந்தாலும், அவரும், எம்.ஜி.ஆரும் சேர்ந்தால் அதன் ஸ்டைலே தனி. இருவரும் பேசும் வசனங்களிலும், சண்டைக் காட்சிகளிலும் பொறி பறக்கும்.

வாழ்க்கை வரலாறு:

13 வயதில் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்த நம்பியார், சுமார் ஆயிரம் படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். 1919ஆம் ஆண்டு மார்ச் 7ம் தேதி கேரள மாநிலம் மஞ்சேரியில் பிறந்தவர்.

1935 ஆம் ஆண்டு தமிழ் மற்றும் இந்தியில் தயாரான பக்த ராமதாஸ் படத்தின் மூலம் திரைப்பட நடிகரானார். அப்படத்தில் அவர் வில்லனாக நடித்திருந்தார். ஆரம்பத்திலிருந்தே வில்லன் ரோல்களில் நடித்ததால், அதுவே அவருக்கு தனி அடையாளமாகி விட்டது.

ஒவ்வொரு படங்களிலும் விதவிதமான வில்லத்தனங்களை அறிமுகப்படுத்திய பெருமையும் நம்பியாரையே சேரும்.

டி.எஸ். பாலையா, எம்.ஜி.ஆர், சிவாஜி தொடங்கி ரஜினி, கமல் படங்களிலும் நடித்த பின், இன்றைய இளம் தலைமுறை ஹீரோக்களான விஜய், விக்ரம் வரை சுமார் 7 தலைமுறை நடிகர்களுடன் நடித்த சாதனைக்குரியவர் நம்பியார்.

சினிமாவில்தான் நம்பியார் வில்லன். நிஜவாழ்வில் அவர் மிகவும் நல்லவராகத் திகழ்ந்தார். சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு 65 ஆண்டுகள் சென்று வந்த பெருமைக்குரியவர். இதனால் அவருக்கு மகா குருசாமி என்ற பெயர் வந்தது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments