இலங்கையில் போர் நிறுத்தம் உடனடியாக ஏற்பட உறுதியான நடவடிக்கையை மத்திய அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, முதல்வர ் கருணாநிதி மீண்டும் அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
webdunia photo
FILE
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இலங்கை தமிழர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று அனைத்து கட்சியினரும் குரல் கொடுத்தும், போராட்டங்கள் நடத்தியும் வருகின்றனர். போராட்டங்களின் நோக்கம் ஒன்றுதான் என்றாலும், கட்சிகளின் நிலைப்பாடுகள் வேறு வேறு விதமாக இருக்கின்றன.
எனவே, ஒருமித்த உணர்வோடு அனைத்து கட்சிகளும் போராட வேண்டும் என்பதை வலியுறுத்தியே அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, முதல்வர் கருணாநிதி அனைத்து கட்சி கூட்டம் நடத்தி முடிவெடுக்க வேண்டும் என்று குரல் கொடுத்ததோடு, 14-10-2008 அன்று நடந்த கூட்டத்திலும் பங்கெடுத்து கருத்துக்களை பகிர்ந்து கொண்டோம். அதையடுத்து நடத்தப்பட்ட மனிதச் சங்கிலி அணி வகுப்பிலும் ராதிகா சரத்குமார் தலைமையில் நாங்கள் பங்கேற்றோம்.
ஆனால், இன்று வரை போர் நடவடிக்கைகளின் தீவிரம் குறைந்தபாடில்லை. தினந்தோறும் அப்பாவி தமிழர்கள் அகதிகளாக புலம்பெயர்ந்து கொண்டே இருக்கிறார்கள்.
பல்வேறு கட்சிகளின் பல்வேறு விதமான போராட்டங்கள் தொடர்ந்தாலும், இலங்கை அரசின் நிலைப்பாட்டில் எந்த வித மாற்றமும் இல்லை. அப்பாவி தமிழர்களுக்கு ஏற்பட்டு வரும் பாதிப்புகளும் நின்றபாட்டில்லை.
விதவிதமான போராட்டங்களை அரங்கேற்றி வருவது, அப்பாவி தமிழர்களின் அவல நிலையை பயன்படுத்தி அரசியல் நடத்துவதற்காக மட்டுமே என்றிருந்தால், அது நாம் இலங்கை தமிழர்களுக்கு இழைக்கும் துரோகமாகவே அமையும்.
எனவே, இலங்கையில் போர் நிறுத்தம் உடனடியாக ஏற்பட உறுதியான நடவடிக்கையை மத்திய அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, முதல்வர் கருணாநிதி மீண்டும் அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
இதில் அரசியல் பாகுபாடின்றி அனைத்துக் கட்சிகளும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும். இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்கள், வெறும் அரசியல் அதிரடி அறிவிப்புகளாக இல்லாமல், அப்பாவி தமிழர்களுக்கு நிரந்தர நிம்மதி ஏற்படுவதற்கான செயல்களாக அமைய வேண்டும்.
இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் ஏற்படும் ஒவ்வொரு நிமிட கால தாமதமும், பல அப்பாவி மக்களின் உயிர்களுக்கும், உடைமைகளுக்கும் ஏற்படும் பேரழிவு என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டிய தருணம் இதுவே என்பதை உணராவிடில், நாம் தமிழர்கள், தமிழ் உணர்வு மிக்கவர்கள் என்று சொல்வதெல்லாம் அர்த்தமற்றதாகிவிடும்" என்று சரத்குமார் கூறியுள்ளார்.