Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை தமிழரின் இன்னல் அறவே தீர்த்திடுவோம் : கருணாநிதி!

Webdunia
சனி, 25 அக்டோபர் 2008 (16:04 IST)
" ம‌னிதச‌ங்‌கி‌லி‌யி‌ல ் சங்கமமான தமிழ் இன மக்களின் முக்கடலையும் வென்றிட்ட கூட்டம், அணி வகுப்பு, ஆர்ப்பரிப்பு, அதில் இணைந்திட்ட நாம் இலங்கை தமிழரின் இன்னல் அறவே தீர்த்திடுவோம்" எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது குறித்து அவ‌ர் வெளியிட்டுள்ள கடிதத்தில், "இலங்கை தமிழர்களை காக்கவும் - அவர்தம் உரிமைகளை அறவழியில் - அமைதி வழியில் - அரசியல் ரீதியாக வாதாடி, போராடிப் பெறுகின்ற வழிமுறைகளை பின்பற்றி தி.மு.க. முயற்சிகளை மேற்கொண்டு - அதற்கு ஒத்து வருகின்ற கட்சிகள், இலங்கை தமிழர்பால் பரிவு கொண்ட இயக்கங்கள் - அவற்றின் தலைவர்கள் - முன்னோடிகள் ஆகியோரிடம் தொடர்பு கொண்டு - அவர்களும் ஈடுபாடு கொண்டு நடத்திய பல போராட்டங்களையும் - செய்த தியாகங்களையும் உலகம் முழுதும் இலங்கை தமிழர்களுக்காக கண்ணீர் வடித்து கொண்டிருக்கும் தமிழர் தம் தூய நெஞ்சங்கள் அறியும்.

படுகொலைகளாலும், பட்டினியாலும் அங்கு தமிழ் மக்கள் மாண்டு மடிந்து கொண்டிருக்கிறார்கள். சிங்கள ராணுவம் பொழிகின்ற குண்டுகளால் தினம் தினம் அழிகின்றது தமிழ் இனம். அந்த அழிவிலிருந்து நம் இனத்தை மீட்க நாமெல்லாம் ஒன்று கூடி இந்தியப் பேரரசின் உதவியை நாடி நிற்கின்றோம்.

இந்திய துணை கண்டத்தில் இப்படி உதவி கேட்டு ஓலமிடும் அனாதை கூட்டமாக - ஒரு காலத்தில் இலங்கையையே ஆண்ட பரம்பரையாய் விளங்கிய அந்த தமிழ் இனம் இன்று தவியாய் தவித்து நிற்கிறது. அந்த தவிப்பை போக்க ஈழத் தமிழ் இனத்தில் இளஞ்சிறார், குழந்தைகள் எனும் புல் பூண்டுகளை கூட அழித்து விடத்துடிக்கும் இனப்படுகொலையை தடுக்க வழி காண வேண்டுமென்பதற்கு தான் கடந்த அக்டோபர் 14ஆம‌் நாள் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களையும் அழைத்து, அரசின் சார்பில் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினோம்.

அந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இந்தியப் பேரரசு ஏற்று நடவடிக்கை எடுத்திடும் என்ற நம்பிக்கையோடு உரியவர்களுக்கு அனுப்பி வைத்தோம், நம்பிக்கை வீண்போகவில்லை. இதற்குமுன்பே - அக்டோபர் 6ஆ‌ம் தேதி மயிலை மாங்கொல்லையில் இலங்கை தமிழர் பாதுகாப்புக்கென பொதுக் கூட்டம் ஒன்றினை கூட்டி நானும் பேராசிரியரும் பேசுவதாக அறிவிக்கப்பட்டது. கூட்டம் அறிவிக்கப்பட்ட அந்நாள் காலையில் பிரதமர் மன்மோகன் சிங் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

அப்போது அவரிடம் நான் புது டெல்லியில் உள்ள இலங்கை தூதரை மத்திய அரசு உடனடியாக அழைத்து, நிராயுதபாணிகளாக உள்ள இலங்கை தமிழர்களை கொல்வது குறித்து இந்தியாவின் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும் என்றும், இலங்கை அரசின் ராணுவ நடவடிக்கையும் இனப்படுகொலையும் உடனடியாக முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்றும், இலங்கை அரசு அமைதி பேச்சுவார்த்தைகளை தொடங்கிட வேண்டும் என்றும், இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் எத்தகைய துன்பங்களுக்கும் இனி ஆளாகவே கூடாது என்றும் கேட்டுக் கொண்டேன். பிரதமர் மன்மோகன் சிங் நான் உடனடியாக கவனிக்கிறேன், என்னை நம்புங்கள் என்று கூறினார்.

நாம் நம்பிக்கை கொள்கின்ற அளவிற்கு 6ஆ‌ம் தேதி மாலையே பிரதமர் இந்திய பாதுகாப்பு ஆலோசகரை அழைத்து, அவர் மூலமாக டெல்லியில் உள்ள இலங்கை நாட்டு தூதரை வரச்சொல்லி, அவரை எச்சரித்து இப்படி தமிழகத்திலே இருந்து அபயக்குரல் வந்திருக்கிறது. கண்டனக்குரல் வந்திருக்கின்றது. தமிழர்கள் தங்களுடைய கவலையைத் தெரிவித்திருக்கின்றார்கள். நீங்கள் எங்களுடைய கருத்தை அறிந்து ஒழுங்காக நடந்துகொள்ள வேண்டும் என்கின்ற அத்தகைய எச்சரிக்கையை இந்திய அரசு அவர்களுக்குச் செய்தது. அதுபற்றிய செய்தி அன்று மாலையிலேயே பத்திரிகைகளுக்கு மத்திய அரசினால் வழங்கப்பட்டது. பத்திரிகையில் வந்த செய்தி, ``ராணுவ நடவடிக்கையின் காரணமாக நிராயுதபாணிகளான தமிழ் மக்கள் கொல்லப்படுவது குறித்து இந்திய நாட்டின் கவலையையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்வதற்காக இலங்கை நாட்டின் தூதுவர் இன்று மத்திய அரசால் அழைக்கப்பட்டார்.

இலங்கை நாட்டின் வடக்கு பகுதியில் ராணுவ நடவடிக்கைகள் பெருமளவிற்கு பரவி வருவதால் ஏற்பட்டுள்ள நிலைமைகள் இந்தியாவிற்கு பெரும் கவலையை அளித்துள்ளது. இலங்கை அரசு நிதானமான போக்கை கடைப்பிடிக்க வேண்டிய அவசியத்தை பற்றியும் சிறுபான்மையினராக உள்ள மக்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதை பற்றியும் சுட்டிக் காட்டப்பட்டது.

மனிதாபிமான சூழல் பாழாகி வருவதும் அரசியல் ரீதியான தீர்வு காண வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டன. பாதிப்புக்குள்ளான பகுதிகளில் தேவையான உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் முறையாக வழங்கப்பட வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டது. இந்திய மீனவர்கள் மீது தொடர்ந்து நடைபெற்று வரும் தாக்குதல்கள் பற்றியும் மிகுந்த கவலை தெரிவிக்கப்பட்டது. இப்படி நடைபெறுவது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே சமீபத்தில் ஏற்பட்ட புரிந்துணர்விற்கு எதிரானதாகும். இலங்கை கடற்படை இத்தகைய தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும். அவர்கள் மனிதாபிமான வாழ்க்கை பரிமாணங்களை மறந்து விடக்கூடாது''.

இதனை தொடர்ந்து 14-10-2008 அன்று நடைபெற்ற அனைத்து கட்சி தலைவர்களின் கூட்ட தீர்மானத்தை பிரதமருக்கு அனுப்பி வைத்தோம்.

அதே நாளில் பிரதமர் மன்மோகன் சிங் செய்தியாளர்களிடம் "இலங்கையில் நிலவும் சூழ்நிலை மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. அங்கு தீவிரமாகி வரும் போரினால் அப்பாவி பொதுமக்களுக்கு ஏற்படும் இழப்புகள் - இடம் பெயர்ந்து அகதிகளாக செல்பவர்கள் அதிகரித்து வருவதும் வேதனை அளிக்கிறது. இலங்கை பிரச்சினைக்கு ராணுவ நடவடிக்கை மூலம் தீர்வு காண முடியாது. சமரச பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வுகாண வேண்டும் என்று தான் நாங்கள் எப்போதும் வலியுறுத்தி வருகிறோம். இலங்கையின் ஒற்றுமை - ஒருமைப்பாட்டை மதிக்கும் வகையிலும், அதே நேரத்தில் சிறுபான்மையினரின் குறிப்பாக சிறுபான்மையாக உள்ள தமிழர்களின் மனித உரிமைகளை மதிப்பதாகவும் அந்தத்தீர்ப்பு அமைய வேண்டும். இந்தியா இலங்கைக்கு இடையே மீன் பிடிக்கும் இந்திய மீனவர்கள் கொல்லப்படுவதும் சித்ரவதை செய்யப்படுவதும் வேதனை அளிக்கிறது'' என்று தெரிவித்து அந்தக் கருத்து பத்திரிகைகளில் இடம் பெற்றுள்ளது.

தமிழர்களின் துயரத்திலும், நாம் நிறைவேற்றிய தீர்மானத்திலும் இந்திய பிரதமர் எந்த அளவிற்கு ஈடுபாட்டோடும், நமக்கு ஆதரவாகவும் உள்ளார் என்பதை தெளிவாக்குகின்ற வார்த்தைகளாக அவரது பேட்டி அமைந்தது எனலாம்.

மேலும் நமது வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி 16-10-2008 அன்றிரவு வெளியிட்ட ஓர் அறிக்கையில், "இலங்கையில் நிலவும் சூழ்நிலை இந்தியாவில் உள்ள எங்களுக்கு பெரிதும் கவலை அளிக்கிறது. தாங்கள் உருவாக்காத சூழ்நிலையின் பிடியில் அப்பாவி மக்கள் சிக்கி தவிக்கிறார்கள். அவர்கள் மீது தொடர்ந்து நடந்து வரும் தாக்குதலை நினைத்துத் தான் நாங்கள் குறிப்பாக கவலைப்படுகிறோம்.

அவர்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படக் கூடாது. அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லப்படுவதை அனுமதிக்கவேண்டும். ராணுவ பலத்தைப் பயன்படுத்தியோ போர்க்கள வெற்றிகளாலோ இயல்பு நிலையை திரும்ப கொண்டு வர முடியாது என்று இந்தியா உறுதிபட தெரிவித்து வருகிறது. பேச்சு வார்த்தை மூலமாக அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். இத்தகைய தீர்வு தான் ஒன்றுபட்ட இலங்கைக்குள் அனைத்துத் தரப்பினரின் உணர்வுகளையும் பூர்த்தி செய்வதாக அமையும். இந்த இலக்கை அடையவும், அப்பாவி மக்களின் கஷ்டங்களை தணிக்கவும் இந்தியா, தனது அதிகாரத்திற்கு உட்பட்டு எல்லா முயற்சிகளையும் எடுக்கும்.

இது தொடர்பாக பல்வேறு மட்டங்களில் இலங்கை அரசின் கவனத்தை இந்திய அரசு ஈர்த்து வருகிறது. இந்திய அரசு கவனம் செலுத்தி வரும் மற்றொரு பிரச்சினை, இந்திய மீனவர்கள் மீதான தாக்குதல் மற்றும் படுகொலை ஆகும். இத்தகைய கொலைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இதை உறுதிப்படுத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்கும்'' என்றெல்லாம் சொல்லியிருப்பதை பார்க்கும்போது, அனைத்து கட்சி கூட்டத்தில் நிறைவேற்றி நாம் அனுப்பிய தீர்மானங்களை யெல்லாம் நன்றாகப் பரிசீலித்து அதனையேற்றுக் கொள்ளும் வகையிலே மத்திய அரசு செயல்படும் என்ற நம்பிக்கைமேலும் கூடுகிறது.

நமது பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை அதிபர் ராஜபக்சேயுடன் தொலைபேசியில் 18-10-2008 அன்று இந்த பிரச்சினை குறித்து நேரடியாகவே பேசியிருக்கிறார். அந்த பேச்சின் போது, இலங்கையின் வடக்கு பகுதியில் அப்பாவி தமிழர்கள் இரக்கமற்ற முறையில் தாக்கப்படுவது குறித்து பிரதமர் கவலை தெரிவித்தார். எந்த சூழ்நிலையிலும் அப்பாவி மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார். இடம் பெயர்ந்த மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் நிவாரண பொருட்கள் தடையின்றி வழங்கப்பட வேண்டுமென்றும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் தமிழரின் உரிமையும் நலன்களும் பாதிக்கப்படக் கூடாதென்றும் பிரதமர் கண்டிப்புடன் தெரிவித்தார் என்று பத்திரிகைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இலங்கையிலே உள்ள நிலைமைகளை அறிய வெளி உறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கே அனுப்பி வைக்கவும் மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக செய்தி வந்துள்ளது. தாக்குதல்களில் இருந்து அப்பாவி மக்களை பாதுகாக்க வேண்டும் என்றும், தமிழர்களுக்கு நிவாரண உதவிகள் தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், இலங்கை இனப் பிரச்சினைக்கு ராணுவ ரீதியில் தீர்வு காண முடியாது என்றும், சட்டத்திற்கு உட்பட்டு, அரசியல் ரீதியில் பேச்சுவார்த்தை மூலம் சமரச தீர்வு காண வேண்டும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார் என்று செய்திகள் வந்துள்ளன.

கடந்த 16-10-2008 வியாழக்கிழமையன்று ஐ.நா. மன்றத்தினால் அனுப்பி வைக்கப்பட்ட 750 டன் உணவுப் பொருட்கள் இலங்கையின் வடக்கு பகுதியில் விநியோகிக்க மறுக்கப்பட்ட நிலையில் - பிரதமர் பேசிய பேச்சின் விளைவாக - பிரதமர் பேசிய அன்றையதினமே 2 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு அந்த உணவு பொருட்கள் விநியோகிக்கப்பட்டன என்றும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. தொடர்ந்து மத்திய அரசின் வெளி உறவு துறை செயலாளர் சிவசங்கரமேனன் டெல்லியிலே உள்ள இலங்கை தூதுவரை அழைத்து இந்திய அரசின் கண்டனத்தை உடனடியாக இலங்கைக்கு தெரிவிக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.

இவற்றுக்கெல்லாம் மேலாக மத்திய வெளி உறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி 22-10-2008 பாராளுமன்றத்தில் தன்னிச்சையாக வைத்த அறிக்கையில் கீழ்க்கண்டவாறு கூறப்பட்டு இருந்தது.

" இலங்கையின் வடக்கு பகுதியில் மனிதாபிமான சூழல்கள் மிகவும் மோசமாகி கொண்டு வருகின்றன. இலங்கையில் நிலவி வரும் சூழல் மத்திய அரசுக்குமிகுந்த கவலையை அளித்து வருகிறது. இலங்கையில் நடைபெறும் போரில் அப்பாவி பொதுமக்கள் படும் இன்னல்களும், இடம் பெயர்வோர் அதிகரித்து வருவது குறித்தும் மத்திய அரசு பெரிதும் கவலை கொண்டுள்ளது.

எந்த நிலையிலும் அப்பாவி மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்றும், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் இலங்கை அரசை நாம் வலியுறுத்தியுள்ளோம். மேலும், உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் அவர்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளோம்.

இலங்கையிலே உள்ள தமிழ் மக்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் நல்வாழ்வு குறித்து நமக்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேச்சு நடத்த இலங்கை பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை அதிபரின் மூத்த ஆலோசகருமான பாசில் ராஜபக்சே விரைவில் இந்தியா வரவுள்ளார். இனப் பிரச்சினைக்கு ராணுவ நடவடிக்கை தீர்வாகாது என்ற நமது ஆழ்ந்த நம்பிக்கையை நான் இங்கு மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.

இலங்கையில் அமைதி பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வுகாண வேண்டும். அது ஒன்றுபட்ட இலங்கையின் சட்ட திட்டத்தின்படி தமிழ் சமுதாயம் உள்ளடக்கிய சிறுபான்மையினரின் வாழ்வுரிமையை பாதுகாக்கும் வகையிலே இருக்க வேண்டும். விடுதலைப் புலிகளுடனான போரில் இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் உரிமைகளும், அவர்களின் நல்வாழ்க்கையும் பாதிக்கப்படக் கூடாது. கிழக்கு மாகாணத்தில் ஜனநாயக நடைமுறை தொடர இலங்கை அரசு எடுத்து வரும் முயற்சிகளை நாம் ஊக்குவிக்கிறோம்.

இந்திய அரசு, நமது மீனவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என இலங்கை அரசை வலியுறுத்தியுள்ளது. பன்னாட்டு கடல் எல்லைக்கு நமது மீனவர்கள் மதிப்பளிக்க வேண்டியது அவசியம் என்றாலும், இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்துவதை கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். இது போன்ற பிரச்சினைகளை சமாளிப்பது குறித்து இருநாட்டு அரசுகளும் இணைந்து செயல்படுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.''

இவ்வாறு பாராளுமன்றத்தில் மத்திய அரசினால் வைக்கப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பிரதமருக்கும், வெளிவிவகாரத் துறை அமைச்சரும் நமது அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தின் தீர்மானத்தின் மீது எடுத்து கொண்டுள்ள நடவடிக்கைகளும் நமது வேண்டுகோளை நிறைவேற்றும் வகையிலும், இலங்கை தமிழர்களின் நல்வாழ்வில் அக்கறை காட்டுகின்ற வகையிலும் அமைந்துள்ளதை அறிந்திட முடிகிறது. ஆனாலும் இதுவே நமக்கு போதுமான முழு மன நிறைவைத் தரக் கூடிய விளைவாகும் என்று எண்ணிட முடியவில்லை.

தரப்படும் உறுதி மொழிகள் தவறாமல் நிறைவேற்றப்படவும் - இலங்கையில் தமிழர்கள் இரண்டாந்தர குடிமக்களாகவும், சிங்களவர்களுக்கு நிரந்தர அடிமைகளாகவும் இருக்க வேண்டுமென்ற ஆதிக்க வெறியும், சிங்கள இனவெறியும் அறவே அகற்றப்பட; தமிழர்கள் இலங்கையை ஆண்ட பரம்பரையினராம் என்ற அந்தப் பெருமையுடன் தமிழ் இனத்திற்கான மதிப்பும் மரியாதையும் தமிழர்கள் உள்ளிட்ட இலங்கை வாழ் மக்களுக்குப் போதுமான சமத்துவ நிலையும் உருவாகி, அங்கே மனித நேயம் மலருகிறது, இன ஒற்றுமை ஒளிருகிறது என்ற நம்பிக்கை நமக்கெல்லாம் ஏற்பட்டாக வேண்டும்.

எனவே இப்போது படிப்படியாக நிறைவேறி வருகிற தாய்த்தமிழக மக்களின் நீண்ட காலக்கனவு; முழுமையாக நிறைவேறிடவும் இலங்கை தமிழர்க்கு நிரந்தர இன்பம் வாய்த்திடவும் - அமைதியின் சுகந்தம் அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் நிறைந்திடவும் - அடிமை விலங்கு அறுபடவும் - ஆதிக்க சக்தி விலகிடவும் - அடுக்கடுக்கான முயற்சிகளில் அன்னை தமிழகத்தில் உள்ள நாம் அறவழிச்செயல் முறைகளில் ஈடுபட வேண்டுமல்லவா; அதற்கான உந்து சக்திகளில் ஒன்று தான் நாம் மேற்கொண்ட "மனிதச் சங்கிலி'' - அந்தச்சங்கிலியில் சங்கமமான தமிழ் இன மக்களின் முக்கடலையும் வென்றிட்ட கூட்டம்! அணி வகுப்பு! ஆர்ப்பரிப்பு! அதில் இணைந்திட்ட நாம்; இலங்கை தமிழரின் இன்னல் அறவே தீர்த்திடுவோம ்" எ‌ன்ற ு கருணாநிதி கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Show comments