'' மதவெறி சக்திகளின் கொடூரமான போக்கை தடுக்க மதசார்பற்ற சக்திகள் ஓரணியில் திரள வேண்டும ்'' என்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
webdunia photo
FILE
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், '' கடந்த ஆறு வாரங்களாக, ஒரிசா மாநிலத்தில் கந்தமால் மாவட்டத்தில் வாழும் கிறிஸ்தவர்கள் மீது விஷ்வ இந்து பரிஷத், பஜ்ரங்தள் உள்ளிட்ட மதவெறி சக்திகள் தொடர்ந்து கொலைவெறித் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலை தடுத்து நிறுத்துவதற்கு அம்மாநில அரசு நடவடிக்கை எடுக்காதது மிகவும் கண்டிக்கத்தக்கது.
இதுவரை கிறிஸ்தவர்களின் 4,500 வீடுகளும், நூற்றுக்கணக்கான தேவாலயங்களும் எரிக்கப்பட்டுள்ளன. 52 பேர் உயிரிழந்துள்ளனர். 60 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வீடிழந்து அகதிகளாக இருக்கின்றனர். கன்னியாஸ்திரி கற்பழிக்கப்பட்டுள்ளார்.
38 நாட்களுக்குப் பிறகுதான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனாதை இல்லத்தில் இருந்த பெண் ஒருவர் வன்முறையாளர்களால் உயிரோடு எரித்து கொல்லப்பட்டுள்ளார். ஒரிசா மாநில அரசு வன்முறையை அடக்க முயற்சி செய்யாதது மிகுந்த வேதனைக்குரியது.
மேலும் ஒரிசாவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது. ஒரிசா நிகழ்வுகளை பார்க்கும்போது, குஜராத் பாணியை பின்பற்றி அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய நிகழ்வுகள் கர்நாடக மாநிலத்திலும் பரவி வருவது, மதவாத சக்திகளின் திட்டமிட்ட செயலாகவே தெரிகிறது.
எனவே, மதவெறி சக்திகளின் இத்தகைய கொடூரமான போக்கை தடுத்து நிறுத்த மதசார்பற்ற சக்திகள் ஓரணியில் திரண்டு, மத்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைக்கும் துணை நிற்கவேண்டும ்'' என்று ஜி.கே.வாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.