'' ஐம்பது ரூபாய்க்கு பத்து மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டத்தை, குதர்க்கம் சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு எதிர்க்கட்சியினர் தெரிவித்திருப்பார்கள் என்றால் சரி, அது அவர்கள் இயல்பு என்று விட்டு விடலாம்'' என முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.
webdunia photo
FILE
இது தொடர்பாக முதலமைச்சர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் என்று வழங்குகின்ற இந்த அரசு வரும் அக்டோபர் 2, காந்தியடிகள் பிறந்த நாள் முதல் சமையலுக்குத் தேவையான மளிகைப் பொருள்களையும், மானிய விலையில் குடும்ப அட்டைதாரர் களுக்கு வழங்குவதின் மூலம் விலைவாசி உயர்வை ஓரளவு கட்டுப்படுத்த அறிவித்துள்ள முயற்சியை ஏழையெளிய நடுத்தர மக்களுக்காகவும், உழைக்கும் வர்க்கத்திற்காகவும் இதுவரை குரல் கொடுத்து வந்த இயக்கத்தின் தலைவர்கள் சிலரே கூட வரவேற்பதற்குப் பதிலாக, எதிர் விமர்சனங்கள் செய்வதைக் கண்டும் கேட்டும் வியப்பும் மிகுந்த மனக்கிலேசமும் அடைகிறேன்.
குறிப்பிட்ட பத்து மளிகைப் பொருள்களை கடைகளில் சில்லறையாக வாங்கினால் ரூபாய் 67 ஆகிறது என்றும ், இப்போது அதே பொருள்களை அரசே வாங்கி பைகளில் இட்டு 50 ரூபாய்க்கு வழங்கப்படும் என்றும், இதனால் சாதாரண மக்களுக்கு கணிசமான அளவு அதாவது 17 ரூபாய் வாங்கும் விலையில் குறைகிறதென்றும் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தேன்.
இதற்கு எதிர்வாதமாகக் சில கட்சித் தலைவர்கள் மதுரையில் இந்த சமையல் சாமான்களை வாங்க 67 ரூபாய் ஆகும் என்று அறிவித்ததை மறுத்து, அதை விடக்குறைவாக மதுரை மளிகைக் கடைகளில் அதே சமையல் சாமான்கள் உள்ள பையை 47 ரூபாய்க்கே பெற்றுக் கொள்ளலாம் என்று கூறியிருப்பது உண்மையாகவே இருக்குமானால், அது கூட நமது அரசின் முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாகவே நாம் கருதி, இன்னும் பொது மக்களுக்கு இதனால் பணம் மிச்சப்படுமானால் அவர்களுக்கும் மகிழ்ச்சி, எமக்கு மகிழ்ச்சி. விலைவாசியைக் கட்டுப்படுத்த நாம் எடுத்த முயற்சிக்கும் மகத்தான வெற்றி என்றே நாம் ஆறுதலடைகிறோம்.
விமர்சனம் செய்திருப்பவர் அதிகாரிகள் சொன்னதைக் கேட்டு அப்படியே நான் அறிவித்து விட்டதாகச் சொல்லியிருக்கிறார். அரசு தற்போது அறிவித்துள்ள பத்து சமையல் பொருட்களின் விலைப்பட்டியலை சென்னையிலே உள்ள சில் லறை மளிகைக் கடைகளில் சென்று பெற்றதில், இதே பொருட்களின் விலை ரூ.62.40 முதல் 93 ரூபாய் வரையில் விற்கப்படுகிறது.
எதற்கும் குதர்க்கம் சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு அவர்கள் தெரிவித்திருப்பார்கள் என்றால் சரி, அது அவர்கள் இயல்பு என்று விட்டு விடலாம். ஏழை எளிய மக்கள் பயன்பெறுவதற்காகவே இயக்கம் நடத்துவோரும், ஏழை எளிய மக்கள் பயன் பெறுவதற்காக நடத்தப்படும் முயற்சிகளுக்கு விமர்சனம் செய்ய முற்பட்டால் என்ன செய்வது.
அது மாத்திரமல்ல, அரசாங்கம் இவ்வாறு குறைந்த விலையில் மானிய விலையில் சமையல் பொருட்களின் விலையைக் குறைத்து விற்க முற்படும்போது, அயல் சந்தையிலே இதே பொருட்களை விற்போரும், தங்களுடைய லாபத்தைக் குறைத்துக் கொண்டு, குறைந்த விலையிலே பொருட்களை விற்க முற்படுவார்கள் என்ற வாய்ப்பும் இதிலே உள்ளது.
இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இவ்வாறு மானி ய விலையில் சமையல் பொருட்களை விற்கின்ற முயற்சி அறிமுகப்படுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த பொருட்களை அரசாங்கம் எந்தத் தனியாரிடம் இருந்தும் தன்னிச்சையாக வாங்கி அதனை விற்பதாகவும் இல்லை. முறைப்படி ஒவ்வொரு பொருளுக்கும் டெண்டர் கோரித்தான் பெற்றிடவுள்ளது. அப்போது அரசாங்கத்திற்கு மேலும் குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்குமானால், அந்தப் பயனும் மக்களுக்கே போய்ச் சேரும் வகையிலே திட்டத்திலே மாறுதல்களைச் செய்யவும் இந்த அரசு தயாராகவே உள்ளது'' என்று கருணாநிதி கூறியுள்ளார்.