அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகள் பதவிக்கான தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும். 2003-ம் ஆண்டு செப்டம்பர் 10ஆம் தேதி கடந்த ஆண்டு தேர்தல் நடைபெற்றது. 5 ஆண்டுகள் ஆவதையொட்டி, இன்று அ.தி.மு.க. நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்பட்டது.
அதில் முதல்கட்டமாக அ.தி.மு.க. பொதுச்செயலாளருக்கான தேர்தல் நடந்தது. இதற்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 2ஆம் தேதி தொடங்கியது. தேர்தல் ஆணையராக அமைப்பு செயலாளர் விசாலாட்சி நெடுஞ்செழியன் நியமிக்கப்பட்டார்.
பொதுச்செயலாளர் பதவிக்கு நடைபெறும் தேர்தலில் ஜெயலலிதா போட்டியிடுவதற்காக முதல் மனு கடந்த 4ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அ.இ.அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் முன்மொழிய, பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், தலைமை நிலைய செயலர் செங்கோட்டையன் ஆகியோர் வழிமொழிந்தனர்.
ஜெயலலிதாவுக்காக ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மனுதாக்கல் செய்திருப்பதாக விசாலாட்சி நெடுஞ்செழியன் தெரிவித்தார்.
இந்த தேர்தலுக்கு 7ஆம் தேதி வரை மனு தாக்கல் நடந்தது. 8 ஆம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன. வேறு யாரும் மனு தாக்கல் செய்யாததால் ஜெயலலிதா போட்டியின்றி ஏகமனதாக இன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அ.இ. அ.தி.மு.க. பொதுச் செயலராக அவர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையர் விசாலாட்சி நெடுஞ்செழியன் அறிவித்தார். 6- வது முறையாக ஜெயலலிதா அ.இ. அ.தி.மு.க. பொதுச்செயலாளராக இன்று பொறுப்பேற்றுள்ளார்.