Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வயலின் சக்ரவர்த்தி குன்னக்குடி வைத்தியநாதன் காலமானார்!

Webdunia
செவ்வாய், 9 செப்டம்பர் 2008 (15:31 IST)
கர்நாடக இசையிலும், திரை இசைப் பாடல்களிலும் இசை ரசிகர்களை மட்டுமின்றி பாமர மக்களையும் தனது வயலின் இசையால் மயக்கிய வயலின் சக்ரவர்த்தி குன்னக்குடி வைத்தியநாதன் காலமானார்.

webdunia photoFILE
வயலின் என்றால் வைத்தியநாதன் என்று போற்றப்பட்ட குன்னக்குடி வைத்தியநாதன், கடந்த சில நாட்களாக உடல் நலம் குன்றிய நிலையில் போரூர் இராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்ததாகவும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த அவருக்கு நேற்று இரவு கடும் மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து இரவு 8.45 மணிக்கு அவர் மரணமடைந்ததாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

சென்னை மந்தவெளி, கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. இசைக் கலைஞர்களும், திரையுலகத்தினரும் அவரது உடலிற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

12 வயதில் மேடையேறினார்!

1935 ஆம் ஆண்டு மார்ச் 2ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் குன்னக்குடியில் இராமசாமி சாஸ்த்திரி - மீனாட்சி ஆகியோருக்கு வைத்தியநாதன் பிறந்தார். கர்நாடக இசைக் கலைஞரான தனது தந்தை இராமசாமி சாஸ்த்திரியிடம் இளம் வயதிலேயே கற்கத் தொடங்கிய வைத்தியநாதன், வாய்ப்பாட்டுடன் வயலின் இசைக்கவும் கற்றுத் தேர்ந்தார்.

12 வயதிலேயே இசைக் கச்சேரிகளில் பங்கேற்று சாதனை புரிந்த வைத்தியநாதன், கர்நாடக இசையில் சிறந்து விளங்கிய வித்தகர்களான அரியாக்குடி இராமானுஜ ஐயங்கர், செம்மங்குடி சீனிவாச ஐயர், மஹாராஜபுரம் சந்தானம், சித்தூர் சுப்ரமணிய பிள்ளை ஆகியோருடன் இணைந்து பல கச்சேரிகளில் பங்கேற்றார்.

கர்நாடக இசைக் கலைஞர்கள் மட்டுமின்றி, நாகஸ்வர மேதைகள் திருவாடுதுறை டி.என். இராஜரத்தினம் பிள்ளை, திருவென்காடு சுப்ரமணிய பிள்ளை ஆகியோருடன் இணைந்து ரசிகர்களை மகிழ்வித்தார்.

தனித்தும் இசைக் கச்சேரிகளை நடத்திய வைத்தியநாதன், கர்நாடக இசையை பாமர மக்களும் ரசிக்கும் வண்ணம், அவர்கள் மிகவும் ரசிக்கும் சிறந்த திரையிசைப் பாடல்களையும் இடையிடையே வாசித்து மகிழ்வித்தார்.

இசை வித்தகர்களில் இருந்து பாமர மக்கள் வரை தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலும் வைத்தியநாதன் என்றால் இசை மழை என்று பெருமை பேசும் அளவிற்கு இளம் வயதிலேயே புகழ் பெற்றார்.

webdunia photoFILE
திரையிசையமைப்பதிலும் பங்கேற்றுவந்த குன்னக்குடி வைத்தியநாதனை தனது வா ராஜா வா படத்தின் இசையமைப்பாளராக அறிமுகம் செய்தார் ஏ.பி.நாகராஜன். அந்த படமும், பாடல்களும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. அதனைத் தொடர்ந்து திருமலை தென்குமரி, தேவர் பிலிம்ஸ் தயாரித்த தெய்வம் படங்களுக்கு இசையமைத்தார் வைத்தியநாதன்.

தெய்வம் படத்தில் கர்நாடக இசை மேதை மதுரை சோமு பாடிய மருதமலை மாமணியே முருகையா என்ற பாடல் மிகவும் பேசப்பட்டது. அப்பாடலை விழாக் காலங்களில் தமிழகம் முழுவதும் பயணித்து மதுரை சோமு பாடினார். அப்பாடலை தனது வயலினில் இசைத்து தனது வாழ்வின் இறுதிக் காலம் வரை மக்களை மகிழ்வித்து வந்தார் வைத்தியநாதன்.

22 தமிழ் திரைப்படங்களுக்கு இசையமைத்த குன்னக்குடி வைத்தியநாதனுக்கு, திருமலை தென்குமரி திரைப்படம் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை பெற்றுத்தந்தது. தமிழக அரசின் கலைமாமணி விருதும் அளிக்கப்பட்டு பெருமைபடுத்தப்பட்டவர் வைத்தியநாதன்.

தவிலுடன் வயலின்!

வயலின் வாசிப்பில் பல புதுமைகளைச் செய்த வைத்தியநாதன், தவில் கலைஞர் வலையப்பட்டி சுப்ரமணியத்துடன் இணைந்து 3,000 கச்சேரிகளை நடத்தியுள்ளார். தமிழ்நாட்டில் மட்டுமின்றி, அயல் நாடுகளுக்கும் சென்று வயலின் இசைக் கச்சேரிகளை நடத்தியுள்ள வைத்தியநாதனுக்கு மத்திய அரசு பத்ம ஸ்ரீ விருதளித்து பெருமைபடுத்தியது.

சங்கீத நாடக அகாடமி, சங்கீத மாமணி, கர்நாடக இசை ஞானி போன்ற பெருமைமிக்க விருதுகளையும் வைத்தியநாதன் பெற்றுள்ளார்.

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் செயலராகவும், திருவையாறு தியாகராஜர் விழாக் குழுவின் தலைவராக 28 ஆண்டுகளும் பணியாற்றியுள்ளார்.

குன்னக்குடி வைத்தியநாதனுக்கு மனைவி பாகீரதி, சேகர், சீனிவாசன், ஸ்ரீதர், பாலசுப்ரமணியன் ஆகிய 4 மகன்களும், மகள் பானுமதி இராமகிருஷ்ணனும் உள்ளனர்.

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments