சமீபத்தில் லண்டனைச் சேர்ந்த சர்வதேச செய்தி பாதுகாப்பு நிறுவனம், உலகம் முழுவதும் பத்திரிகையாளர்களுக்கு ஆபத்தான நாடுகளைப் பற்றி ஆய்வு செய்தது. இந்த ஆய்வின் முடிவில், கடந்த 2012ஆம் ஆண்டில் மட்டும் 134 பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல் தெரிய வந்துள்ளது. பெரும்பாலானவர்கள் உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே குறிவைத்து கொல்லப்பட்டுள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.
உலகம் முழுவதும் கொல்லப்பட்ட 134 பேரில் 20 பேர் சிரியாவில் நடந்த ஆயுதத் தாக்குதலிலும், 16 பேர் ஈராக்கிலும், 51 பேர் ஊழல் மற்றும் குற்றச்சம்பவங்களிலும், 18 பேர் விபத்துக்களிலும் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த நாடுகளின் பட்டியலில் சிரியா மற்றும் ஈராக் நாடுகளை தொடர்ந்து பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உள்ளன. இந்தியாவிற்கு பத்திரிகையாளர்களுக்கு ஆபத்தான நாடுகளின் வரிசையில் 4-வது இடம் அளிக்கப்பட்டுள்ளது.
ஆபத்தான இடங்களில் செய்திகள் சேகரிக்கும் பத்திரிகை நிருபர்களுக்கு பாதுகாப்பு பயிற்சியை வழங்கி வரும் இந்நிறுவனம், உலகின் முன்னணி செய்தி அமைப்புகளின் நிதியுதவியுடன் கடந்த 1996ம் ஆண்டிலிருந்து ஆய்வில் ஈடுபட்டு வருகிறது.