Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹசன் அலி கான் வீட்டில் சோதனை, கைது

ஹசன் அலி கான் வீட்டில் சோதனை, கைது
, திங்கள், 7 மார்ச் 2011 (19:02 IST)
FILE

சுவிட்சர்லாந்த் தலைநகர் ஜூரிக் நகரிலுள்ள யு.பி.எஸ். வங்கியின் இரகசியக் கணக்கில் இந்தியாவில் இருந்து சட்டத்திற்குப் புறம்பான வழிகளில் 800 கோடி டாலர் போட்டிவைத்துள்ளதாகக் கூறப்படும் ஹசன் அலி கானின் புனே வீட்டில் பொருளாதார அமலாக்க இயக்கக அதிகாரிகள் இன்று சோதனை நடத்தியது மட்டுமின்றி, அவரை கைது செய்து மும்பைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

புனே நகரிலுள்ள கோரேகான் பூங்கா எனும் பணக்கார மக்கள் வாழும் பகுதியிலுள்ள ஹசன் அலி கான் வீட்டை மும்பையிலிருந்து சென்றுள்ள அமலாக்க இயக்ககத்தின் இரண்டு அதிகாரிகள் குழு இன்று காலை முதல் சோதனையிட்டது. அதன் பிறகு அவரை அமலாக்க இயக்கக அதிகாரிகள் மெர்சிடிஸ் கார் ஒன்றில் ஏற்றி மும்பைக்குக் கொண்டு சென்றனர். அவரிடம் விசாரணை நடத்தும் நோக்குடன் கைது செய்யப்பட்டுள்ளதாக உறுதிபடுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

புனேயில் குதிரைப் பண்ணை வைத்து நடத்திவரும் ஹசன் அலி கான், வீட்டு மனை விற்பனை ஆலோசகராகவும் இருக்கிறார் என்றும், கருப்புப் பணத்தை ஹவாலா மூலம் கடத்திக் கொண்டு சென்று அயல் நாட்டு வங்கிகளின் இரகசியக் கணக்குகளில் சேர்ப்பதில் வல்லவர் என்றும் இவர் மீது வருமான வரித்துறை குற்றம் சாற்றுகிறது.

ஹவாலா வழியில் இவர் கொண்டு சென்று சுவிட்சர்லாந்தின் யு.பி.எஸ். வங்கியில் போட்டு வைத்துள்ள பணம் மட்டும் 8 பில்லியன் டாலர்கள் என்றும், அதற்கு வருமான வரி விதித்தாலே ரூ.40 ஆயிரம் கோடி அரசுக்கு வருவாய் கிட்டும் என்றும் கூறப்படுகிறது. வரி ஏய்ப்பு செய்த காலங்களையும் கணக்கில் சேர்த்து அதற்கு தண்டம் விதித்தால் மேலும் பல ஆயிரம் கோடி வருவாய் கிட்டும் என்றும் கூறப்படுகிறது.

உச்ச நீதிமன்றத்தில் கருப்புப் பணத்தை வெளிக்கொணருவது குறித்த பொது நல வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, இவ்வளவு பெரிய அளவிற்கு கருப்புப் பணத்தை அயல் நாடுகளுக்குக் கொண்டு சென்று குவித்து வைத்துள்ளவர் மீது நடவடிக்கை எடுக்காமல் இந்த நாட்டின் அரசுத் துறைகள் என்ன செய்துக்கொண்டிருக்கின்றன என்று நீதிபதிகள் கடுமையாக வினா எழுப்பினர்.

ஹசன் அலி கான் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பதை ஒரு அறிக்கையாக இம்மாதம் 31ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன் காரணமாகவே, 2007ஆம் ஆண்டிற்குப் பிறகு இன்று ஹசன் அலி வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. அவரிடம் நேரில் விசாரணை நடத்த இம்மாதம் 10ஆம் தேதி வருமாறு வருமான வரித்துறை அழைப்பாணை விடுத்திருந்தது. இந்த நிலையில் அவர் வீட்டில் சோதனை நடத்தப்பட்ட பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil