2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பான விசாரணையை உச்ச நீதிமன்றமே கண்காணிக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
ஸ்பெக்ட்ரம் முறைகேடு குறித்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி மத்திய புலனாய்வுக் கழகமான சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணை மந்த கதியில் செல்வதாக சிபிஐ-யையும், மத்திய அரசையும் சமீபத்தில் உச்ச நீதிமன்றம் கடுமையாக சாடியிருந்தது.
இதனையடுத்தே இவ்வழக்கில் நடவடிக்கைகள் சூடுபிடிக்கத் தொடங்கின. மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்த ராசா, பதவி விலகினார்.
அதனையடுத்து ராசா, அவரது உதவியாளர்கள் மற்றும் நீரா ராடியா உள்ளிட்டோரின் வீடுகளில் சிபிஐ சோதனை மேற்கொண்டது.
இந்நிலையில் ஸ்பெக்ட்ரம் வழக்கு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி மற்றும் ஏ.கே.கங்குலி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு விசாரணையை உச்ச நீதிமன்றம் கண்காணிக்கும் என்று கூறிய நீதிபதிகள், சிபிஐ-யும், அமலாக்கப் பிரிவும் தங்கள் விசாரணை அறிக்கையை மூடி முத்திரையிட்ட கவரில் வைத்து வருகிற பிப்ரவரி 10 ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்றும், 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான விசாரணையை 2001 ஆம் ஆண்டு தொடங்கி, 2008 வரை நடத்தும்படியும் உத்தரவிட்டனர்.
மேலும் ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை சரியான திசையில் செல்கிறதா என்பதை நீதிமன்றம் கண்காணிக்க அரசு ஒப்புக்கொண்டதாலும், இந்த ஊழல் தொடர்பாக சிபிஐ- யும், அமலாக்கப் பிரிவும் விரிவான விசாரணை நடத்தும் என சிபிஐ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியமும், மூத்த வழக்கறிஞர் வேணுகோபாலும் உறுதியளித்ததாலும், இந்த ஊழல் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு தேவையில்லை என்றும் குறிப்பிட்ட நீதிபதிகள், வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை பிப்ரவரி 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.