Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாடாளுமன்ற முடக்கம்: அனைத்துக்கட்சி கூட்டம் தோல்வி

நாடாளுமன்ற முடக்கம்: அனைத்துக்கட்சி கூட்டம் தோல்வி
புதுடெல்லி , செவ்வாய், 30 நவம்பர் 2010 (17:45 IST)
2ஜி விவகாரத்தால் நாடாளுமன்றம் தொடர்ந்து முடங்கி வரும் நிலையில், இப்பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக சபாநாயகர் மீரா குமார் நடத்திய அனைத்துக்கட்சிக் கூட்டம் தோல்வியில் முடிவடைந்தது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு வலியுறுத்தி எதிர்கட்சிகள் இன்றும் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றம் இன்று தொடர்ந்து 13 ஆவது நாளாக முடங்கியது.

இதனையடுத்து இந்த முட்டுக்கட்டைக்கு தீர்வு காண்பதற்காக அனைத்துக்கட்சி கூட்டத்தை மக்களவை சபாநாயகர் மீரா குமார் இன்று கூட்டியிருந்தார்.

இக்கூட்டத்தில் நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்துவதற்கு எதிர்கட்சிகளின் ஒத்துழைப்பை அவர் கோரினார்.

ஆனால் 2ஜி ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு குறைந்த எந்த ஒரு தீர்வையும் தாங்கள் ஏற்க முடியாது என கூட்டத்தில் கலந்துகொண்ட தலைவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர்.

அரசு தரப்பிலோ 2ஜி ஊழல் தொடர்பான விசாரணையை உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் சிபிஐ விசாரிக்கலாம் என்ற திட்டத்தை முன்வைக்கப்பட்டது. ஆனால் அதனை ஏற்க எதிர்கட்சிகள் திட்டவட்டமாக மறுத்துவிட்டதால், அனைத்துக்கட்சிக் கூட்டம் தீர்வு எதுவும் எட்டப்படாமல் தோல்வியிலேயே முடிவடைந்தது.

நடப்பு குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 13 ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.ஆனால் நாடாளுமன்ற முடக்கத்திற்கு தீர்வு எதுவும் எட்டப்படாததால், இந்த கூட்டத்தொடர் முழுவதுமே நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான செலவுகள், படித்தொகை மற்றும் நிர்வாக செலவு போன்ற வீண் இழப்பை தவிர, மக்களுக்கு பயன்தரும் விவாதங்களோ அல்லது திட்டங்களோ இன்றி முடியப்போகிறது என்பதுதான் நடைமுறை யதார்த்தமாக உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil