லைலா புயல் எச்சரிக்கை காரணமாக ஆந்திர கடலோர மாவட்டங்களில் மீட்பு குழுவினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணா, விசாகப்பட்டிணம், நெல்லூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
லைலா புயல் சின்னம் காரணமாக ஆந்திர மாநிலத்தில் கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கிருஷ்ணா மாவட்டம் சொர்ணகுண்டி கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் 3 பேர் கரை திரும்பவில்லை. அவர்களை மீட்கும் பணி தொடங்கியுள்ளது.
புயல் கரையை கடக்கும்போது தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டால் மாற்று நடவடிக்கை குறித்து ஆலோசிக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு ஆந்திர அரசு அறிவுரை கூறியுள்ளது.
புயல், வெள்ளம் காரணமாக ஏற்படும் நாசம் குறித்து உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மீட்பு குழுவினரும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
லைலா புயல் ஓங்கோல்-விசாகப்பட்டினம் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதால் ஆந்திர கடலோர மாவட்டங்களில் முகாம்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புயல் நிலவரம் குறித்து ஆராய முதலமைச்சர் ரோசைய்யா அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.