நடிகர் அமிதாப் பச்சன் வீட்டின் முன்பாக இயக்குனர் சீமான் தலைமையிலான நாம் தமிழர் இயக்கத்தின் சார்பாக நூற்றுக்கணக்கான தமிழர்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து நாம் தமிழர் இயக்கத்தின் மும்பை கிளை ஒருங்கிணைப்பாளர்கள் ராஜேந்திரன், அர்ஜூன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
வெகு விரைவில் IIFA எனப்படும் சர்வதேச இந்தியத் திரைப்பட விருது வழங்கும் விழா இலங்கையில் நடக்க இருக்கிறது.இலங்கை அரசு தனது போர் குற்றங்களை சர்வதேச பார்வையில் இருந்து மறைக்கும் முகமாக இந்தியாவின் கூட்டு சதியில் இந்த நிகழ்வு நடைபெற உள்ளது.
இந்த விருது வழங்கும் விழாவிற்கு நடிகர் அமிதாப் தான் விசேஷ தூதுவராக செயல்படுகிறார். ஏற்கனவே நாம் தமிழர் இயக்கத்தின் சார்பாக நடைபெற்ற அமிதாப் வீடு முற்றுகை போராட்டத்தின் விளைவாக நமக்கு சாதகமான சில செய்திகள் வந்த போதும், அண்மையில் சிங்கள அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இலங்கையில் நடைபெறவிருக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விருது விழாவில் திட்டமிட்டபடி பாலிவுட் நட்சத்திரங்கள் அமிதாப் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள், அதை யாராலும் தடுக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் IIFA விருது வழங்கும் விழாவை இலங்கையில் நடத்த மாட்டோம் என அறிவிக்க வலியுறுத்தி நாம் தமிழர் இயக்கத்தால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
மும்பை தமிழர்கள் அனைவரும் தாங்கள் சார்ந்துள்ள கட்சி, இயக்கங்களை மறந்து தமிழராய் ஒன்றுகூடி இப்போராட்டத்தை வென்று எடுக்க ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.