லஞ்ச, ஊழல் வழக்குகளில் சிக்கும் 'பெரிய மீன்'களை நழுவவிடக் கூடாது என்று லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு பிரதமர் மன்மோகன் சிங் அறிவுரை வழங்கியுள்ளார்.
மத்திய குற்றப் புலனாய்வுத் துறையின் (சி.பி.ஐ.) 17வது மாநாடு டெல்லியில் இன்று தொடங்கியது. இதில் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த சி.பி.ஐ. அதிகாரிகள், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்த மாநாட்டை தொடங்கி வைத்து பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது:
லஞ்சம் மற்றும் ஊழல் வழக்குகளில், சிறிய அளவிலான வழக்குகள் (பெட்டி கேஸ்) மட்டுமே விரைவில் முடிக்கப்படுகின்றன. பெரிய அளவிலான ஊழல் வழக்குகளில் தொடர்புடையவர்கள் தப்பி விடுவதாக கருத்துக்கள் நிலவுகின்றன.
லஞ்ச, ஊழல் ஒழிப்பு என்பது ஒருவழி பாதை அல்ல; அனைத்து வழிகளிலும் இதை தடுத்து நிறுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
எனவே, பெரிய வழக்குகளில் சிக்கும் 'பெரிய மீன்'களை (பெரிய மனிதர்கள்) நழுவவிடக் கூடாது. இவ்வாறு மன்மோகன் சிங் பேசினார்.