கேரளாவில் பெய்து வரும் தொடர் மழையால் வடக்கு மாவட்டங்களான வயநாடு, கோழிகோடு, கண்ணூர், பாலக்காடு, திருச்சூர் ஆகிய 5 மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அம்மாநிலத்தில் கடந்த 15 நாட்களாகப் பெய்து வரும் பருவமழைக்கு இதுவரை 30 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், நேற்று மேலும் 11 பேர் பலியானதால், அந்த எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.
திருச்சூர்-சாலக்குடி ரயில் பாதையில் மலையில் இருந்து பாறைகள் உருண்டு விழுந்ததால், ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வயநாடு, மூணாறில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாவட்டங்களில் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழந்துள்ளது. மழையால் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.