இலங்கையில் அகதிகள் முகாமில் வாடிக்கொண்டிருக்கும் தமிழர்களுக்கு மருந்து, உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களுடன் வந்துள்ள வணங்கா மண் கப்பலை கொழும்பு துறைமுகத்திற்குள் அனுமதிக்குமாறு சிறிலங்க அரசை இந்தியா சம்மதிக்கச் செய்ய வேண்டு்ம் என்று அயலுறவு அமைச்சரைச் சந்தித்து தமிழக அமைச்சர் அ.ராசா வலுயுறுத்தியுள்ளார்.
தலைநகர் டெல்லியில் அயலுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை இன்று சந்தித்த அமைச்சர் அ. இராசா, வணங்கா மண் கப்பலில் உள்ள நிவாரணப் பொருட்களை கொழும்புவில் இறக்கவும், அதனை சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் வாயிலாக தமிழர்களுக்கு அளிக்கவும் சிறிலங்க அரசை இந்தியா சம்மதிக்கச் செய்ய வேண்டும் என்று கோரும் மனுவை அளித்தார்.
இலங்கை அதிபர் ராஜபக்சவின் சகோதரர்கள் ஃபசில் ராஜபக்ச, கோத்தபய ராஜபக்ச ஆகியோர் இன்று டெல்லி வந்துள்ளனர். அவர்களை இன்று அமைச்சர் கிருஷ்ணா சந்தித்துப் பேசுவதற்கு முன்னர் ராசா அவரை சந்தித்து இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
“எம்.வி. கேப்டன் அலி (வணங்கா மண்) கப்பலில் வந்துள்ள நிவாரணப் பொருட்கள் தமிழர்களை சென்றடைய இந்தியா தலையிட்டு சிறிலங்க அரசை சம்மதிக்கச் செய்து தமிழ் மக்களுக்கு அந்த நிவாரணப் பொருட்கள் சென்றடைய உதவிட வேண்டும் என்று தமிழக முதலமைச்சரின் சார்பாகவும், தமிழ்நாட்டு மக்களின் சார்பாகவும் உங்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்” என்று அந்த மனுவில் அமைச்சர் ராசா கூறியுள்ளார்.
சிறிலங்க அரசுக் குழுவுடன் நடத்தவுள்ள பேச்சுவார்த்தையில் இப்பிரச்சனைக்கு முன்னுரிமை அளிக்கமாறும் அமைச்சர் கிருஷ்ணாவை ராசா கேட்டுக் கொண்டுள்ளார்.
புலம் பெயர்ந்த தமிழர்கள் திரட்டிய 884 டன் நிவாரணப் பொருட்களுடன் ஏப்ரல் 20ஆம் தேதி இங்கிலாந்தில் இருந்து புறப்பட்ட வணங்கா மண் கப்பலை ஜூன் 9ஆம் தேதி கொழும்பு துறைமுகத்திற்குள் அனுமதிக்க மறுத்து திருப்பி அனுப்பியது சிறிலங்க அரசு. அந்தக் கப்பல் தற்பொழுது சென்னை துறைமுகத்திற்குள் நுழைய அனுமதியின்றி சர்வதேச கடல் பரப்பில் நின்று கொண்டிருக்கிறது.