ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்களுக்கு எதிரான இனவெறித் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அந்த நாட்டு பல்கலைக்கழகம் தனக்கு வழங்க முன்வந்த கவுரவ டாக்டர் பட்டத்தை நிராகரித்தார் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன்.
பிரிஸ்பேனில் உள்ள குயின்ஸ்லேண்ட் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் சார்பில் அமிதாப்பின் சினிமா உலக பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் டாக்டர் பட்டம் அளிக்க விருப்பம் தெரிவித்திருந்தது.
இதற்கு ஏற்கனவே அமிதாப் இசைவு தெரிவித்திருந்தார்.
வரும் ஜூலை மாதம் இதற்கான விழா நடைபெறுவதாக இருந்தது. அதன் ஒருபகுதியாக அமிதாப் நடித்த படங்களும் பிரிஸ்பேனில் திரையிடப்பட இருந்தது.
இந்நிலையில் பிரிஸ்பேன் பல்கலைக்கழகம் அளிக்கும் டாக்டர் பட்டத்தை நிராகரித்து விட்டதாக தமது சொந்த வலைத்தளத்தில் அமிதாப் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய மாணவர்களுக்கு எதிரான தாக்குதல்களை தொலைக்காட்சிகள் மூலம் அறிந்து தாம் மிகுந்த அதிர்ச்சி அடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
அதற்காக தாம் அந்த பல்கலைக்கழகத்தை அவமதிப்பதாக அர்த்தமாகாது; எனது சொந்த நாட்டு குடிமக்கள் மனிதாபிமானமற்ற தாக்குதலுக்கு ஆளாக நேரிடும் தற்போதைய சூழ்நிலையில் தமது உள்மனது பல்கலைக்கழகத்தின் கவுரவத்தை ஏற்றுக்கொள்ளாது என்றும் அமிதாப் கூறியுள்ளார்.